தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவரை நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோமோ இல்லையோ யூடியூப்களில் அதிகளவு பாத்திருப்போம். அதற்கான காரணம் அவர் செய்யும் ஸ்டண்ட், நடனம் தான்.

ஆளில்லா ரயிலோ, ஆகாய விமானமோ, மின்னல், புயல் என எதுவாக இருந்தாலும் கிராபிக்ஸ் மகிமையால் சும்மா அசால்ட்டா டீல் செய்து ஒற்றை விரலில் நிறுத்துவது தான் அவரது ஸ்டைல். ஏன், மலை உச்சியில் உயிருக்கு போராடும் முயலை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் இரக்க குணம் கொண்டவர் தான் பாலகிருஷ்ணா. ஆனால் நிஜத்தில் நம்ம ஹுரோ அதீத கோபக்காரர் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

கூட்டத்திற்குள் சிக்கினால் இவரிடம் அடிவாங்காத ரசிகர்களே இல்லை என்ற அளவுக்கு அங்கு பிரலமாகியுள்ளார் நடிகர்  பாலகிருஷ்ணா. இந்த நிலையில் அரசியலில் புகுந்த அவர் தற்போது ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இந்துபூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்நிலையில்  ஆந்திராவில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா, தெலுங்குதேசம் கட்சி பிரமுகர் வீட்டிற்கு சென்றார். பாலகிருஷ்ணாவை பார்த்த பரவசத்தில் ரசிகர் ஒருவர் தூரத்தில் நின்று புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். இதை கவனித்த நடிகர் பாலகிருஷ்ணா, அவரது செல்போனை தட்டிவிட்டு அவரின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டுள்ளார்.

தன் பிறகும் ஆத்திரம் அடங்காத அவர், செல்போனில் உள்ள தனது புகைபடத்தை அழிக்க கூறி மீண்டும் ஒரு பளார் அறை விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தான் தெரிந்தது அடி வாங்கியவர் விருந்துக்கு அழைத்த அரசியல் பிரமுகரின் சகோதரர் என்பது. 

பின்னர் நிலைமை சமாளிக்க அடி தாங்கி சோமுவிற்கு, தெலுங்குதேசம் கட்சியின் சால்வையை போர்த்தி, தான் நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகர் என்றும் அவரது கைகள் என் மீது பட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றும் பேசவைத்து எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.