கொரோனா வைரஸ் 2-ம் அலை மாபெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் தினமும் 4 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் கொரோனா தொற்றால் தினமும் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 297 பேர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். முதல் அலையை விட இரண்டாம் அலையில் வைரஸின் தாக்குதல் மிகவும் அதிகமாக இருப்பதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறார்கள். 

மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் வசதிகள்  போதிய அளவில் இல்லாமல் மக்கள் திணறுகிறார்கள். இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் இதற்காக மும்முரமாக 24 மணி நேரமும் உழைத்து வரும் நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணப் பணிகள் செய்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவுமாறு முதல்வர் வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து பலரும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவி வரும் நிலையில் இரு தினங்களுக்கு முன்னால் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் இவர்களின் தந்தை நடிகர் சிவகுமார் மூவரும் முதல்வரை சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார். 

அதேபோல் நடிகர் அஜித்குமார் இப்போது நிதி உதவி வழங்கி உள்ளார். கொரோனாவின் 2-ம் அலையின் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். அஜித்குமார் செய்த இந்த நிதி உதவியை பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள் தொடர்ந்து பல சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் தமிழ்நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ்  தாக்கு தாக்குதலில் தாக்குப் பிடிப்பதற்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்து வருவதை நாம் பார்க்க முடிகிறது.