லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நவம்பர் 29-ம் தேதி 2018 இன்று வெளியாகியிருக்கிறது 2.0. திரையரங்கத்தை இறைவழிபாடு செய்யும் ஸ்தலமாக மாற்றும் திறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மட்டுமே உண்டு. 2010-ம் ஆண்டு வெளியான எந்திரன் படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டாரை சூப்பர் ஹீரோவாக திரையில் காண்பித்த பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு நன்றி.

லைக்கா தயாரிக்கும் முதல் 3டி படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது 2.0. படம் முழுக்க 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் ஷங்கரின் கதைக்கு கூடுதல் ஊட்டச்சத்து ஏற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.

முறையாக 3டி கேமராக்களை உபயோகித்து ஹாலிவுட் தரத்திற்கு கொண்ட சென்ற அவரது கேமரா அங்கிள்கள்நிச்சயம் போற்றப்பட வேண்டும். நாடி நரம்பு வரை ஒலிக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களுக்கு விசில் பறந்தன. இத்தருணத்தில் பாடலாசிரியர் மதன் கார்க்கியின் மெழுகேற்றும் ரோபோட்டிக் வரிகள் பிரமாதம்.

திரையரங்கில் ஆங்காங்கே நம்மை அதிர வைத்து 4டி சவுண்ட் வடிவமைத்த ரசூல் பூக்குட்டியின் உழைப்பு வீணாகவில்லை. ஒரு நல்ல கதைக்கு சவுண்ட் எவ்வளவிற்கு முக்கியம் என்பதை நிரூபித்துள்ளார் ரசூல்.

செல்போன் தொழில்நுட்பம் குறித்த தகவல்களும், அதன் பலன்கள் மற்றும் பாதிப்புகளும் படத்தில் இடம் பெற்றிருப்பது சீரான கருத்தை வெளிப்படுத்துகிறது. ஷங்கர் படம் என்றாலே எந்த அளவிற்கு பிரம்மாண்டமோ அதே அளவிற்கு கருத்து ஊசி போடும் மருத்துவராக திகழ்வார். எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் கூடுதல் பலமாக இருந்திருக்கும்.

நடிகர் அக்ஷய் குமார் மிரட்டும் தொனியில், வெறித்தனமாக நடித்துள்ளார். இப் படம் அக்ஷய் மற்றும் ரஜினிகாந்துக்கு மீண்டும் ஒரு மைல்கல் ஆக அமையும். இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக அக்ஷய் குமார் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இதற்காக அவர் அணிந்து இருக்கும் வேடம் பிரமிக்க வைக்கிறது. படம் முழுவதும் அவரது நடிப்பு வியக்க வைக்கிறது.

சைன்ஸ் பிக்ஷனான இப்படத்தில், ஆண்ட்ராய்டு புரட்சியை ஒரு பரபரப்பாக்கி, அதில் வைத்திருக்கும் சதி, கற்பனை திரைக்கதை, அதிர்ச்சியூட்டும் விளைவுகள் என்று படம் த்ரில்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் தோன்றும் ஸ்டண்ட் காட்சிகள் நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டு இருந்தாலும், கதையின் தேவைக்கு ஏற்றார் போல் அமைத்திருக்கிறார் ஸ்டண்ட் சில்வா. 18 கிலோ எடையுள்ள காஸ்டியூமுடன் நிற்பதே அரிது, அதை சவாலாக மேற்கொண்ட ஏமி ஜாக்சன் மற்றும் ரஜினிகாந்தின் மெனக்கெடல் பாராட்டிற்குரியது.

சிவாஜி, எந்திரனை தொடர்ந்து ஷங்கர்-ரஜினி கூட்டணியில் ஹாட்ரிக் வெற்றி என்றே கூறலாம். ப்ரோமோஷன் பணிகள் பெரிதளவில் இல்லையென்றாலும் தகுதியுள்ள படம் ரசிகர்கள் மனதை ஈர்க்கும் என்பதற்கு இப்படம் ஓர் எடுத்துக்காட்டு.

பக்ஷி ராஜ் என்ற பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் அக்ஷ்ய குமார். இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டும் இல்லை என்பதை தனது கதை மூலம் எடுத்துரைத்த இயக்குனர் ஷங்கருக்கு நன்றி. குறிப்பாக அக்ஷய் குமாரின் உருமாறும் திறன் அவரது நடிப்புத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறது.

அலட்டிகொள்ளாத எமி ஜாக்சனின் நடிப்பு அனைவரையும் விரும்பச்செய்தது. சர்ப்ரைஸ் நிறைந்த காட்சிகளுக்கு திரையில் பலத்த கைத்தட்டுகள். ஹீரோ ரஜினியை எந்த அளவிற்கு ரசிப்போமோ அதே போல் 2.0வாக தோன்றும் ரஜினியின் வில்லத்தனத்தை ரசிப்போம்.

படத்தில் எங்கேயாவது பிசிறு தட்டினால் தனது ஸ்டைலான வசனத்தால் ஈர்க்கிறார் சூப்பர் ஸ்டார். செல்போன் கதிர்வீச்சுகள் உயிரினங்களுக்கு எந்த அளவிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை கச்சிதமாக எடுத்துரைக்கிறார். நிச்சயம் குழந்தைகள் விரும்பும் படமாக அமைந்திருக்கிறது. படத்தின் வசூல் வேட்டை எந்த அளவிற்கு வருகிறது என்பதை பார்க்கலாம்.

கருப்பு&வெள்ளை காலம் துவங்கி 3டி வரை வந்திருக்கும் ரஜினிகாந்தின் இந்த திரைப்பயணம் மென்மேலும் தொடர கலாட்டா குழு சார்பாக வாழ்த்துகிறோம்.

கலாட்டா ரேட்டிங் - 2.75/5