ஆண் குழந்தைக்காக கணவன் ஒருவன், தனது மனைவிக்கு 1500 ஊசிகள் போட்டு கடும் சித்திரவதை செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகரில் பகுதியில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி அனைத்து தரப்பினரையும் அதிர வைத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதர் பகுதியில் ஒரு வீட்டில் தாய், மகன் வழக்கறிஞராகவும், மகள் டாக்டராகவும் உள்ளனர். இதில், வழக்கறிஞரான தனது மகனுக்கு, அவரது தாயார் பெண் பார்த்து வந்துள்ளார்.

அதன் படி, கடந்த 2007 ஆம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து, தனது மகனுக்கு அவர் முறைப்படி திருமணம் செய்து வைத்திருக்கிறார். இப்படி, குடும்பமே படித்த குடும்பமாக இருப்பதால், பெண் வீட்டார் தானாக முன்வந்து, தங்களது மகளை அவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 2009 ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையும், அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தையும் பிறந்து உள்ளது.

இதனால், சோகமடைந்த அந்த கணவன், “தன்னுடைய குடும்பத்தையும், சொத்தையும் காப்பாற்ற ஒரு ஆண் வாரிசு வேண்டும்” என்பதில் பிடிவாதமாக இருந்திருக்கிறார். இது தொடர்பாக, தனது நண்பர்கள் மற்றும் பல்வேறு மருத்துவர்களை நாடிச் சென்று, அவர் தீவிர ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார்.

அத்துடன், தன்னுடைய குடும்பத்திலேயே சகோதரி ஒருவர் மருத்துவராக உள்ளதால், அவரிடமும் அவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, அவர் மனைவி 8 ஆண்டுகளில் தொடர்ந்து கருவுற்றிருக்கிறார். ஆனால், வயிற்றில் வளர்வது பெண் குழந்தை என்பதை தெரிந்துகொண்டு, அந்த கருவைக் கலைக்கச் சொல்லி பிடிவாதமாக அவர் இருந்திருக்கிறார். 

இப்படியாக, அவருடைய மனைவிக்கு தொடர்ந்து 8 முறை அடுத்தடுத்து கருக்கலைப்பு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனாலும், விடப்பிடியாக இருந்த அந்த கணவன் “எனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும்” என்று, விடாமல் தனது மனைவியை டார்ச்சர் செய்ய  தொடங்கியிருக்கிறார். 

மேலும், “தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்” என்பதற்காக, தனது மனைவியை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, பாங்காங்கில் சிறப்பு சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். 

அதன் பிறகு, இந்தியாவிலும் சில அறுவை சிகிச்சைகளைச் செய்யச் சொல்லி அவர் மனைவியை அவர் கடும் டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். 

குறிப்பாக, இந்தியாவில் தடை செய்யப்பட்ட “ஸ்டீராய்டு ஊசிகளையும்” மனைவிக்கு செலுத்தி இருக்கிறார். இப்படியாக, தடை செய்யப்பட்ட இந்த “ஸ்டீராய்டு ஊசிகளை ஒரு முறை இரு முறை அல்ல, கிட்டத்தட்ட 1500 ஸ்டீராய்டு ஊசிகளைத் தனது மனைவிக்கு செலுத்தியிருக்கிறார். ஆனாலும், அவர் மனைவி ஆண் குழந்தை கரு உருவாகவில்லை. ஆனாலும், கணவனும் தனது மனைவியை விடுவதாக இல்லை. தொடர்ந்து கொடுமைப் படுத்த தொடங்கியிருக்கிறார்.

இதனால், கணவனின் கொடுமைகளையும், அது சார்ந்த வலிகளையும் இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்த அவர் மனைவி, தான் அனுபவித்து வரும் கொடுமைகளைப் பற்றி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார். அந்த பெண்ணுக்கு சட்டத்திற்குப் புறம்பாகக் கருக்கலைப்பு செய்தது தொடர்பாகவும், உடல் ரீதியாகத் துன்புறுத்தி வந்தது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்து போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களையும், எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்றனர்.