“வனிதா செய்த தவறுக்காக அவர் மன்னிப்பு கேட்பாரா?” என்று பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கேள்வி எழுப்பி உள்ளார். 

தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்ட கொரோனா வைரஸ் மற்றும் சாத்தான்குளம் லாக்கப் டெத் உள்ளிட்ட பிரச்சனைகளை மறந்து, தமிழக மக்கள் பலரும் வனிதா பிரச்சனையிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், நடிகை வனிதா - சூர்யா தேவி பிரச்சனையைத் தமிழ்நாடே கடந்த ஒரு மாத காலமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு வருகிறது. 

நடிகை வனிதா - சூர்யா தேவி சண்டையால், ஏற்கனவே கடந்த வாரம் நடிகை வனிதா - சூர்யா தேவி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்த சென்னை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், இருவரையும் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த நிலையில், அது தோல்வியில் முடிந்தது. இருவரும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாகக் கூறிவிட்டு வந்தார்கள். 

இதனையடுத்து, இருவரும் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு, வீடியோவிலேயே சண்டை போட்டு வந்தனர். அத்துடன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி ஆகியோரிடமும் நடிகை வனிதா வீடியோவில் அவதூறு பேசி, “போடி.. வாடி.. இவளே.. அவளே..” என்றெல்லாம் பேசி தமிழ்நாட்டையே பரபரப்புக்குள் உள்ளாக்கினார். 

இந்நிலையில், நடிகை வனிதாவின் புகாரின் பேரில், சூரிய தேவி முதல் நாள் இரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, சூரிய தேவியின் 2 பிள்ளைகளும் அநாதையாகி உள்ளதாக, சூரிய தேவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மது என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி வீடியோ வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக, நடிகை கஸ்தூரி சூரிய தேவியை ஜாமீனில் எடுக்கும் வேலையில் இறங்கினார். அதன்படி, வழக்கறிஞர் ஒருவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலையே சூரிய தேவி ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவை லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பேசி உள்ள எலிசபெத் ஹெலன், “லட்சுமி ராமகிருஷ்ணன் எங்களுக்கு ஆதரவாகப் பேசினார். நான் சொல்லித் தான் அவர் பேசினார். ஆனால், நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை தவறாகவும் தரக்குறைவான வார்த்தைகளாலும் பேசி அவர் மனசைக் கஷ்டப்படுத்தி உள்ளார். 

எங்களுக்காக ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன் உதவி செய்ததால், அவருக்கு தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நினைத்து எங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது” என்றும் கவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், “லட்சுமி ராமகிருஷ்ணனின் வயதுக்குக் கூட, நடிகை  வனிதா மரியாதை கொடுக்க வில்லை. எங்களால் தான், அவருக்கு இந்த அவமதிப்பு ஏற்பட்டது. வனிதா செய்த தவற்றுக்காக மன்னிப்பு கேட்பாரா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 

“லட்சுமி ராமகிருஷ்ணனினை, வனிதா அப்படிப் பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு நன்றி” என்றும், அந்த விடியோவில் எலிசபெத் ஹெலன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.