இந்தியாவில் கொரோனா இல்லாத பசுமை மண்டலங்களை ஒப்பிடும்போது ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில் பாலியல் புகார்கள் குறைந்துள்ளதாகவும், அதே சமயம் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதன் காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட புதிதில், கணவன் - மனைவி இடையே புரிதல் அதிகரித்து கர்ப்பங்கள் இந்த ஆண்டு அதிகரிக்கும் என்ற செய்திகளும் வெளியானது. 

ஆனால், அடுத்தடுத்த மாதங்களில் மது கடைகள் மூடல் காரணமாக, மது குடிக்காமல் தவித்து வந்த குடிமகன்களால் குடும்பத்தில் வன்முறை சம்பங்கள் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 4 மாத கால ஆவதால், இந்தியாவில் பெண்களுக்கு எதிராகவும், பாலியல் பலாத்கார சம்பங்கள் குறித்த ஆய்வு ஒன்றும் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக இந்தியாவில் கொரோனா ஊரடங்கின் வீட்டுச் சூழல் குறித்து அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “இந்தியாவில் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாகப் பலரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால், இந்தியாவில் ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டல மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் அதிகரித்துள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்களின் படி, இந்த ஆய்வு அறிக்கை தொகுத்து வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, “ கடந்த ஆண்டு மே மாதம் 266 வீட்டு வன்முறைப் புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருந்ததாகவும், இப்போது அது உயர்ந்து 392 ஆக அதிகரித்துள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு 198 பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களின் எண்ணிக்கை, கடந்த 2019 ஆம் ஆண்டு 163 ஆக குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், எண்ணிக்கையில் 54 ஆக அந்த குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், “கடந்த ஆண்டு மே மாதம் 266 ஆக இருந்த சைபர் குற்றங்கள், தற்போது 73 ஆக குறைந்துள்ளது” என்றும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கியமாக, “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பசுமை மண்டலங்களை ஒப்பிடும் போது, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களில் பாலியல் புகார்கள் குறைந்து காணப்படுகிறது” என்றும், கூறப்படவுள்ளது.

“இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பசுமை மண்டலங்களில், எப்போதும் போல வழக்கமான ஒரு நிலையே” காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக, இந்தியாவின் பொது இடங்களின் நடமாட்டம், பொது போக்குவரத்து மற்றும் வேலை செய்யும் நிலை இல்லாத காரணமாக இருக்கலாம்” என்றும், அமெரிக்காவின்  கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.