நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவானால்  அந்த குறிப்பிட்ட தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தலைப் பொறுத்தவரை எந்த கட்சியில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட மக்களுக்கு அவர்கள் மேல் அதிருப்தியான மனநிலையே காணப்படுகிறது.அப்போது அந்த வேட்பாளர்களையோ, கட்சியையோ புறக்கணிக்க சுயேட்சை வேட்பாளர்களையும் மக்கள் ஆதரிக்க ஆரம்பித்தனர். ஆனால் அதே நேரத்தில் எந்த வேட்பாளர்கள் மீதும் உடன்பாடு இல்லாத பட்சத்தில் மக்கள் வாக்களிக்காமல் செல்வதை தவிர்க்க தேர்தல் ஆணையம் ஒரு புது வழியை அறிமுகப்படுத்தியது.

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிடில் , மக்கள் நோட்டாவில் வாக்களிக்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது.அது மிகப்பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. நோட்டாவில் விழும் வாக்குகளால் தேர்தல் முடிவுகளில் எந்தவித மாற்றத்தையோ,தாக்கத்தையோ ஏற்படுத்தாது. நோட்டாவுக்கு என்று எந்த அதிகாரமும் இல்லாத சூழல் நிலவிவருகிறது.

 

https://1480864561.rsc.cdn77.org/assets/general-images/16158162702-election.jpg

இந்தியாவில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய  5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேர்தலை சமூகமாக நடத்த வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

தற்போதைய நடைமுறைப்படி, நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவானாலும் கூட,  அதிகமான  வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கும் வேட்பாளரே வெற்றிப்பெற்றவராக அறிவிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக நோட்டாவை அறிமுகப்படுத்தியன் நோக்கம் என்ன , அது முற்றிலுமாக சிதைக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தநிலையை மாற்றி நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவாகும் பட்சத்தில், அந்த குறிப்பிட்ட தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், அந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட அனுமதிக்க கூடாது என்றும் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி  எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு , மத்திய அரசும் ,தேர்தல் ஆணையமும் இது குறித்து பதிலளிக்க வேண்டுமென நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

நோட்டாவில் அதிக வாக்குகள் பதிவாகும் பட்சத்தில் தேர்தல் ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்றும், தேர்தல் ஆணையம் இது குறித்து எந்த மாதிரியான பதில் அளிக்கும் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.