அடிக்கடி தாம்பத்திய உறவுக்கு கணவன் வற்புறுத்தியதால், கடுப்பான மனைவி உணவில் விஷம் வைத்து கணவனை கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனியை சேர்ந்த நாச்சிமுத்து கவுண்டர் மகன் நந்த குமார், அந்த பகுதியில் விவசாயம் செய்து வந்தார்.

விவசாயம் செய்தது போக மீதி நேரத்தில், அந்தியூர் ஜீவா செட் பகுதியில் உள்ள மாவு மில்லில் பணியாற்றி வந்தார். 

இவருக்கு கடந்த 7 மாதங்கள் முன்பு, பவானி அருகே உள்ள ஜம்பை பெரிய மோளபாளையத்தை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் மைதிலி உடன் முறைப்படி திருமணம் நடைபெற்றது. 

திருமணத்திற்குப் பிறகு, கணவனும் - மனைவியும் நன்றாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர்.

அதே நேரத்தில், கணவர் நந்தகுமார் மனைவி மைதிலியை, இரவு பகல் பாராமல் தொடர்ச்சியாகத் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ள அடிக்கடி மனைவியைத் தொந்தரவு செய்து வந்ததாகத் தெரிகிறது. 

இப்படியாக, கணவன் - மனைவிக்குள் பல மாதங்களாகவே, மனைவியின் விருப்பம் இல்லாமல் வலுகட்டாயத்தின் பேரில் பாலியல் உறவு நடந்து வந்திருக்கிறது.

இந்த பாலியல் உறவில் கணவனின் ஆசை எல்லை மீறி போகவே, அதில் பெரிதும் நாட்டம் இல்லாத அந்த பெண், கணவன் மீது அடிக்கடி கோபப்பட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் மேல், கணவனின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் அவரை கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டு உள்ளார்.

அதன் படி, கடந்த மாதம் 28 ஆம் தேதி கணவன் நந்தகுமார், தனது தோட்டத்தில் மருந்து தெளித்துக்கொண்டு இருந்து உள்ளார். அப்போது, அவருடைய மனைவி வயலுக்குச் சாப்பாடு கொண்டு வந்து, கணவனுக்குப் பரிமாறி உள்ளார். இதனை சாப்பிட்ட நந்தகுமாருக்கு, உணவு கசப்பாக இருப்பது ஏன் என்று கேட்டு சண்டை போட்டு உள்ளார். ஆனால், அந்த சாப்பாட்டைக் கொஞ்சமாக சாப்பிட்டதால், அடுத்த இரு தினங்களில் நந்தகுமாருக்கு உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து, அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நந்தகுமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, நந்தகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் விஷம் இருப்பதாகக் கூறி உயர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி அதிகாலை நேரத்தில் நந்தகுமார் சிகிச்சை பலனில்லாமல், பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அங்கு விரைந்து வந்த போலீசார், நந்தகுமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காகப் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

இது தொடர்பாக உயிரிழந்த நந்தகுமாரின் மனைவியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது தான், “அடிக்கடி தாம்பத்திய உறவுக்குக் கணவன் வற்புறுத்தியதால், உணவில் விஷம் வைத்து கொன்றதாக” அவரது மனைவி, குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால், அவர் கைது செய்யப்பட்டு பின்னர், கணவனை கொலை செய்த மைதிலியை பவானி நீதிமன்றத்தில் முன்னிறுத்திய அந்தியூர் போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, கணவரை விஷம் வைத்து கொலை செய்த மைதிலி, நந்தகுமாரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.