சென்னை புழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரெவி புயலாலின் தாக்கம் காரணமாக சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

மேலும், புரெவி புயல் காரணமாக சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவும் சென்னையில் கனமழை முழுவதுமாக கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக, சென்னை அருகே உள்ளே புழல் ஏரி, முழு கொள்ளவை எட்டத் தொடங்கி உள்ளது.

அதன் படி, 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 20 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால், சென்னை அருகே உள்ள புழல் ஏரி இன்று பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படுகிறது.

இது தொடர்பாக புழல் ஏரி உபரி நீர் கால்வாய் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், “புழல் ஏரியில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு மேல் முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 

அத்துடன், ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, “புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆனது சுற்றி உள்ள கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல்,  வட பெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாக செல்லும் என்றும், இதனால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு” மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவுறுத்தி உள்ளார்.

அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4 ஏரிகளின் இன்று காலை 6 மணி நேர நிலவரப்படி, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி 

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 35 அடி நீர் மட்டம் உள்ள ஏரியில் தற்போது 34.11 நீர் மட்டம் உள்ளது. அங்கு, தற்போது 2853 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்தானது 2459 கன அடியாகவும், உபரி நீர் 2459 கன அடியாகவும் வெளியேற்றப்படுகிறது. 

சோழவரம் ஏரியில் 650 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அங்கு, நீர்வரத்து 694 கன‌அடியாக இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3187 மில்லியன் கன அடி நீர் இருப்பு தற்போது இருக்கிறது. அதில், நீர்வரத்து 1120 கன அடியாகவும், 1120 கன அடி நீர் வெளியேற்றப்பட்டும் வருகிறது.

மேலும், சென்னை சுற்றியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டர் என்ற அளவில் திருவள்ளூரில் 45 மில்லி மீட்டரும், பொன்னேரியில் 27 மில்லி மீட்டரும், ஊத்துக்கோட்டையில் 74 மில்லி மீட்டரும், பள்ளிப்பட்டு பகுதியில் 35 மில்லி மீட்டரும், ஆர்கே பேட்டையில் 27 மில்லி மீட்டரும், கும்மிடிப்பூண்டியில் 81 மில்லி மீட்டரும், திருத்தணியில் 54 மில்லி மீட்டரும், பூந்தமல்லியில் 30 மில்லி மீட்டரும், பூண்டியில் 42 மில்லி மீட்டரும், சோழவரம் பகுதியில் 90 மில்லி மீட்டரும், தாமரைப்பாக்கம் பகுதியில் 57 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.