வசந்த அன் கோ உரிமையாளர் வசந்தகுமார் அண்ணாச்சியின் மறைவைத் தொடர்ந்து, “அவர் இருந்த இடத்திற்கு நீங்கள் வரணும்” என்று, நடிகர் விஜய் வசந்தை அவரது அபிமானிகள் அரசியலுக்கு இழுப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உழைப்பாள் உயர்ந்து புதியதொரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் வசந்த அன் கோ உரிமையாளர் வசந்தகுமார் அண்ணாச்சி. தொழில் அதிபர் அந்தஸ்தைத் தொடர்ந்து, கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக வெற்றிப் பெற்றார் வசந்தகுமார் அண்ணாச்சி.

அதன் தொடர்ந்து தற்போது கொரோனா என்னும் பெருந்தொற்று பரவிய நிலையில், அதனால் உடல் நலக் குறைவு ஏற்பட்டு, பின் அதிலிருந்து மீண்ட நிலையில், கடந்த 28 ம் தேதி மாலை 7 மணி அளவில் அவர் உயிரிழந்தார். அண்ணாச்சியின் மறைவு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குப் பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியில் அவர் வகித்து வந்த இடமானது தற்போது வெற்றிடமாகவே உள்ளது.

இதனிடையே, வசந்தகுமார் அண்ணாச்சிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், அதில் இளைய மகன் திரைப்படத் தயாரிப்பு மற்றும் வசந்த் அன் கோ நிர்வாகத்தை முழுமையாக நிர்வகித்து வருகிறார். மூத்த மகன் நடிகர் விஜய் வசந்த், திரைப்படங்களில் நடித்து வருவதோடு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளையும் கவனித்து வருகிறார்.
 
இந்நிலையில், அண்ணாச்சி வசந்தகுமாரின் மூத்த மகன் நடிகர் விஜய் வசந்த், அரசியலில் அண்ணாச்சியின் இடத்திற்கு வர வேண்டும் என்று, அவரது அபிமானிகள் உறக்க குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

மேலும், “கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நடிகர் விஜய் வசந்திற்கு, காங்கிரஸ் கட்சி சீட் தர வேண்டும் என்ற கோரிக்கை குரல்களும் தற்போது பரவலாக எழுந்துள்ளன.

அதே நேரத்தில் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிலவரப்படி ரூபி மனோகரன் அல்லது நடிகர் விஜய் வசந்த் ஆகிய இருவரில் ஒருவருக்கு தான், கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சீட் வழங்கும் என்று, அக்கட்சியில் சிலர் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளனர்.

எனினும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இன்னும் காலியாக உள்ளதாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில், அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே நேரத்தில், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்குத் தனித்து இடைத் தேர்தல் நடத்தப்படுமா? அல்லது தமிழகச் சட்டமன்றத் தேர்தலுடன் இணைத்து தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.