சினிமாவில் சிறந்த நடிகராகவும் சீரான ஒளிப்பதிவாளராகவும் திகழ்பவர் நட்டி நட்ராஜ். பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும், சதுரங்க வேட்டை திரைப்படம் இவரை புகழின் உச்சத்தில் நிறுத்தியது. கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்த ஆண்டு காட்ஃபாதர், வால்டர் என தொடர்ச்சியாக இவரது படங்கள் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நடிகர் நட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் சினிமாவில் இருக்கும் குரூபிசம் குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில் தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு... யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க... யாருங்க நீங்க???? என பதிவு செய்துள்ளார். நட்டியின் இந்த பதிவால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர் திரை ரசிகர்கள். தமிழ் சினிமாவிலும் இந்த நிலைமையா என்று கமெண்ட் செய்தனர். 

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நட்டி, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதும், நாட்டு நடப்பு பற்றி ட்வீட் செய்தும் வருகிறார். இவரது பதிவிடும் ட்வீட்டுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.  கடைசியாக கைலாசா கரன்சி குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த கைலாசா கரன்சி எப்படி இருக்கும் ? ஐயம் வெயிட்டிங்... என பதிவு செய்திருந்தார். 

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் எச்3 சினிமாஸ் பதாகையின் கீழ் இயக்குநர் கஸாலி அவர்கள் இயக்கி தயாரிக்கும் இரண்டாவது படத்தில் நடிகர் நட்டி அவர்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்றும் தலைப்பு விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து திரைப்படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என்றும் அதனை இயக்குநர் பாரதிராஜா, சத்ய ஜோதி ஃபிலிம்ஸின் டி.ஜி. தியாகராஜன், எடிட்டர் பிரவீன், முத்துராஜ் தங்கவேல், சண்டை இயக்குநர் திலீப் சுப்புராயன் மற்றும் நடன இயக்குநர் தினேஷ் உள்ளிட்டோர் வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

குறிப்பிட்டது போலவே திரைத்துறை பிரபலங்கள் இன்று ஹிரோஷிமா திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர்கள் அனைவரையும் டேக் செய்து தங்களது வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர். தாஜ்நூர் இசையில், மு.காசி விஸ்வநாதன் எடிட்டிங்கில், சதீஷ் ஒளிப்பதிவில், பிரபல நடிகர்கள் மனோபாலா, டி.சிவா மற்றும் பலர் இதில் நடிக்க உள்ளனர். இதைப் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.