கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனால் பஸ், ரயில், விமான சேவை உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

மேலும் தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. வருகிற 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தொடங்கவுள்ளது. இதனிடையயே செப்டம்பர் 1ம் முதல் தமிழக அரசின் அனைத்து அலுவலங்களும் 100% ஊழியர்களுடன் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக 50% ஊழியர்களுடன் இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது தினமும் 100 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கி வருவதால் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுமுறைகளை கணக்கில் கொண்டு தமிழகத்தில் அரசு அலுவலங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் டிசம்பர் மாதம் வரை வரும் சனிக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகம் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிப்பை அடுத்து அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது

முழு அளவில் ஊழியா்கள் பணிக்கு வருவதைத் தொடா்ந்து, தமிழக அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்திய சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சுழற்சி முறை ரத்து காரணமாக, சனிக்கிழமை வேலை நாளும் தானாகவே ரத்தாகி விடும் என அரசு ஊழியா்கள் கருதினா். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழ்நிலை இருந்ததையும், தேங்கியுள்ள பல்வேறு பணிகளை விரைந்து முடிக்கும் வகையிலும், சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது டிசம்பா் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஊழியா்களுக்கு சனிக்கிழமை வேலை நாள் என்ற நடைமுறை கடந்த 1992-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரத்து செய்யப்பட்டது. அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, வாரத்துக்கு ஐந்து நாள்கள் வேலை நாள்கள் என்பதையும், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணி நேரம் என்பதையும் வரையறை செய்தாா்.

கொரோனா பாதிப்பு காரணமாக, இந்த முறையில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பா் மாதம் வரை சனிக்கிழமை வேலை நாள் என்பது நடைமுறையில் இருக்கும். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக விடுமுறை விடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் பட்சத்தில், தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் உள்பட பலரும் எளிதாகச் சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். குறிப்பாக, வருவாய்த் துறை தொடா்பான சான்றிதழ்கள் பெறுவது, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், ரேஷன் அட்டை பெறுவது போன்ற பணிகளைப் பொது மக்கள் சனிக்கிழமை மேற்கொள்ள முடியும்.

வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுக்கு, அரசு ஊழியா்கள் பலரும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. இந்த கோரிக்கைகள் மீது விரைவில் தமிழக அரசு முடிவெடுக்கும் என சங்க நிா்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.