திருமணமானதை மறைத்து 2 வது திருமணம் செய்த கணவன், தன் மனைவியுடன் வாழும் போதே மீண்டும் 3 வதாக திருமணம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

வட மாநிலங்களைப் போல் அரங்கேறிய இந்த சம்பவம், தமிழ்நாட்டில் அதுவும் திருப்பூர் மாவட்டத்தில் தான் அரங்கேறி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிருந்தா என்ற இளம் பெண், அங்குள்ள செல்லம் நகர் பகுதியைச் சேர்ந்த சின்ன மருது பாண்டியன் என்ற இளைஞருடன், கடந்த 2011 ஆம் ஆண்டு இருவீட்டார் பெற்றோரும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களது திருமண வாழ்க்கை ஒரு மாதம் மட்டுமே மகிழ்ச்சியாக சென்று உள்ளது. 

இதனையடுத்து, திருமணமான ஒரு மாதத்தில் கணவன் சின்ன மருது பாண்டியனின் தாயார் மாரியம்மாள், “20 பவுன் தங்க நகைகளும், ஒரு லட்சம் ரூபாய் பணமும்” மருமகள் பிருந்தாவிடம், வரதட்சணையாகக் கேட்டுத் துன்புறுத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த பிருந்தா, தனது கணவரிடம் புகார் கூறியிருக்கிறார். ஆனால், அவரும் தனது தயாருக்கு ஆதராவகாவே பேசி உள்ளார். 

இதனையடுத்து, தனது பெற்றோரிடம் பிருந்தா கூறிய நிலையில், இது தொடர்பான பிரச்சனை அப்படியே புகைந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்திற்குப் பிறகு, மருமகள் பிருந்தாவின் பெற்றோர், தங்களது சம்பந்தியான மாரியம்மாளிடம் சென்று நேரில் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர்.

அப்போது “எனது மகன் வெளி நாட்டில் வேலை பார்த்தவர் என்பதால், அவருக்கு வரதட்சணையாகக் கூடுதலாக நகை மற்றும் பணம் வழங்க வேண்டும்” என்று, 
பிடிவதமாக கேட்டு உள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த பிருந்தாவின் பெற்றோர், “தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் இப்போது அவற்றைத் தர முடியாது என்றும், எதிர் காலத்தில் தருவதாகவும் கூறி சமாதானம் பேசி உள்ளனர். இதனால், அந்த பிரச்சனை அப்படியே இருந்து வந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இளம் பெண் பிருந்தா, தனது தலை பிரசவத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்று உள்ளார். 

இந்த நேரத்தில், தனது மகன் சின்ன மருதுபாண்டியனுக்கு சட்டத்திற்குப் புறம்பாக வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்து உள்ளார் அவரது தாயார் 
மாரியம்மாள்.

இந்த தகவல் எப்படியோ, மனைவி பிருந்தா மற்றும் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால், பிருந்தா மற்றும் அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும், “சின்ன மருது பாண்டியன் மலேசியாவில் வேலை பார்த்தபோது, அங்கு ஏற்கெனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதும்” பிருந்தா மற்றும் அவர்களது உறவினர்களுக்குத் தெரிய வந்தது. 

இந்த நிலையில், “ஏற்கனவே திருமணமானதை மறைத்ததோடு மட்டுமல்லாமல், என்னுடன் வாழும் போதே வேறொரு பெண்ணை சட்டத்திற்குப் புறம்பாகத் 
திருமணம் செய்து எனது கணவன் சின்ன மருதுபாண்டியன் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மாரியம்மாள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மனைவி பிருந்தா புகார் மனு அளித்தார். 

இது தொடர்பான புகார் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே, ஏற்கனவே திருமணமானதை மறைத்து 2 வது திருமணம் செய் கணவன், தன் மனைவியுடன் வாழும் போதே மீண்டும் 3 வதாக வேற ஒரு பெண்ணை திருமணம் செய்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.