2 சிறுமிகளைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். இதனிடையே, அந்த சிறுமி கடந்த மாதம் 15 ஆம் தேதி, திடீரென்று மாயமாகி உள்ளார்.

சிறுமி மாயமானது தொடர்பாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதி முழுவதும் தேடி பார்த்துள்ளனர். ஆனால், எங்குத் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், அவரது பெற்றோர் அங்குள்ள உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமி மாயமானது தொடர்பாகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
இந்நிலையில், அங்குள்ள அணைக்கட்டு பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த ஒரு இளைஞரைப் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, அந்த இளைஞனைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில், அந்த இளைஞர் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பது தெரிய வந்தது. மேலும், அந்த இளைஞர் தான், கடந்த மாதம் மாயமான 16 வயது சிறுமியைக் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து, அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், சிறுமி உள்ள இடம் தெரிய வந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியை மீட்டனர். அத்துடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

16 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, அஜித்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும், இது போன்று, அந்த பகுதியில் வேறு எந்த சிறுமிக்காவது அவர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் பிறகு, அந்த இளைஞரை போலீசார் சிறையில் அடைந்தனர்.

அதே போல், ஆம்பூர் அடுத்த பஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவியும் கடந்த சில நாட்களுக்குக் காணாமல் போனார். 

இதனையடுத்து, சிறுமியின் தந்தை அந்த பகுதி முழுவதும் சிறுமியைத் தேடிப் பார்த்துவிட்டு, அங்குள்ள உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று அந்த பகுதியில் உள்ள பேர்ணாம் பட்டு பேருந்து நிலையம் அருகே, சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த இளைஞர் ஆம்பூர் அடுத்த பந்தேரப் பள்ளி பகுதியைச் சேர்ந்த உமாபதி என்பது தெரிய வந்தது. 

குறிப்பாக, இந்த இளைஞன் தான், கடந்த சில நாட்களுக்கு அந்த பகுதியில் மாயமான 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியைக் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த இளைஞன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமி கடத்தப்பட்டது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 சிறுமிகள் கடத்தப்பட்ட நிலையில், 2 பேரும் மீட்கப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை 
ஏற்படுத்தி உள்ளது.