சாத்தான்குளம் : மேலும் ஐந்து காவலர்கள் சஸ்பெண்ட்!
By Madhalai Aron | Galatta | Jul 13, 2020, 02:00 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான் குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தங்களின் கடையைத் திறந்து வைத்திருந்த காரணத்துக்காக, கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையில் உயிரிழந்தனர். இந்த கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட 10 காவலர்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து, அவர்களை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிலிருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யின் டெல்லி டிடாட்ச்மெண்டின் ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான ஏழு பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் சாத்தான்குளத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
11-ம் தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முதல்நாளான 11-ம் தேதி, ஜெயராஜ் வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், ஜெயராஜின் மனைவி மற்றும் மகள்களிடம் சுமார் ஐந்து மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தந்தை, மகன் சித்ரவதைக் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லத்துரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய ஐந்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், நீதித்துறை நடுவரை அவதூறாகப் பேசிய காவலர் மகாராஜன் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் துறையினர் 11 பேர் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெல்லியிலிருந்து வந்துள்ள ஏ.டி.எஸ்.பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ அதிகாரிகள் திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் ஓர் அறையைத் தங்கள் அலுவலகமாக மாற்றினர். இந்த வழக்கு தொடர்பாக பெறப்பட்ட அனைத்து ஆவணங்களையும் அந்த அறையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இதற்குமுன் கைதான காவல் அதிகாரிகள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனு மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. ஜாமீன் மனு மீதான விசாரணையை மாலை 5 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதற்கிடையே சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி அனில்குமார் தலைமையிலான குழு சி.பி.ஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு ஆவணங்களில் உள்ள சந்தேகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மதுரை மத்தியச் சிறையில் உள்ள சாத்தான்குளம் ஆய்வாளர் உட்பட 5 பேரை முதல் கட்டமாக எடுத்து விசாரணை நடத்தவும் இரண்டாம் கட்டமாகத் தடயங்களை அளித்ததாகக் கூறப்படும் சிறப்பு உதவி ஆய்வாளர் உட்பட 5 பேரை விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இதனிடையே பென்னிக்ஸ் நண்பர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
- பெ.மதலை ஆரோன்.