திருச்சி அருகே சிறுமி எரிந்த நிலையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சிறுமியை தற்கொலைக்குத் தூண்டிய இளைஞன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளான்.

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமியின் மகள் 14 வயதான கங்கா தேவி, அந்த பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதியத்திற்குப் பிறகு கங்கா தேவி, தன் சக தோழிகளிடம் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். 

பின்னர், வீடு திரும்பிய அந்த சிறுமி, வீட்டில் உள்ள குப்பைகளை எடுத்துக் கொண்டு அந்த பகுதியில் உள்ள முள் காட்டில் கொட்டுவதற்காகச் சென்றிருக்கிறார். அதன் பிறகு, அந்த சிறுமி வீடு திரும்பவில்லை. 

இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். அத்துடன், சிறுமியின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் என அந்த ஊரே சேர்ந்து சிறுமியை தேடி உள்ளது.

அப்போது, குப்பை கொட்டச் சென்ற முள் காடு அமைந்துள்ள பகுதியில், சந்தேகத்தின் பேரில், சிறுமி அந்த பகுதியில் சென்று தேடி உள்ளனர். அங்கு, உடல் கருகிய நிலையில், சிறுமி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அங்கு, மர்ம நபர்கள் சிலர், சிறுமி மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடி இருக்கலாம் என்று கருதப்பட்டது. 

இதனைப் பார்த்த சிறுமியின் பெற்றோர், அலறி அடித்துக்கொண்டு, அதே இடத்தில் கண்ணீரைக் கொட்டித் தீர்த்து அழுது புரண்டனர். இந்த தகவல் குறித்து விரைந்து வந்த போலீசார், சிறுமியின் எரிந்த உடலைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அத்துடன், சோமரசம் பேட்டை காவல் நிலையத்தில் வைத்து 2 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதி முழுவதும் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியானது. அதன்படி, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட வில்லை என்பது உறுதியானது. அதே நேரத்தில் சிறுமியின் பின் பக்க தலையில் காயம் இருந்ததும் தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் தோழிகள் மற்றும் சிறுமியின் உறவினர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் உறவினரான 26 வயதான செந்தில் குமார் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. சம்பவத்தன்று, அந்த பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களிடம் சிறுமி பேசிக்கொண்டு இருந்ததை, உறவினர் செந்தில் குமார் பார்த்து சிறுமியை கண்டித்துள்ளார். 

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால், சிறுமியை தற்கொலைக்குத் தூண்டியதாக, உறவினர் செந்தில் குமாரை போலீசார் தற்போது கைது செய்து, சிறையில் அடைத்தனர்.