தருமபுரியில் 6 ஆம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில், தருமபுரி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த, டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வரும் 28 வயதான பெரியசாமி, அந்த பகுதியாக வந்து உள்ளார். 

அப்போது, அந்த 11 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை, அவர் கவனித்து உள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியிடம் பேச்சுக் கொடுப்பது போல், அந்த சிறுமியை ஏமாற்றி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்கு, ஆட்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்துகொண்ட அவர், அங்கு வைத்து, அந்த 6 ஆம் வகுப்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, வலி தாங்க முடியாமல், சத்தம் போட்டுக் கத்தி உள்ளார். அதே நேரத்தில், சிறுமியை காணவில்லை என்று, அவரது பெற்றோர் அந்த பகுதிக்குத் தேடி வந்து உள்ளனர். அப்போது, சிறுமியின் பெற்றோரை பார்த்த பெரியசாமி, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். 

இதனையடுத்து, சிறுமியை அவரது பெற்றோர் மீட்டு உள்ளனர். அப்போது, பெரியசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததைக் கூறி சிறுமி அழுதுள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, சிறுமியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தா, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். 

மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செய்த பெரியசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார், அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்திய போலீசார், அதன் பிறகு சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், குடிமங்கலம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அடுத்து உள்ள ராவணாபுரத்தைச் சேர்ந்த சக்கரையன் என்பவரின் மகன் 26 வயதான சந்தோஷ், திருமணமான நிலையில், குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த 14 வயது சிறுமியை மிரட்டி, அவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அவரை தட்டிக்கேட்டு, அந்த சிறுமியை மீட்டு உள்ளனர். இதனால், அவர் சண்டைக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரைக் கைது செய்ய வலியுறுத்தி, பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக விரைந்த போலீசார், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து, அனைவரும் போராட்டத்தை கை விட்டுக் கலைந்து சென்றனர். 

அத்துடன், சம்மந்தப்பட்ட சந்தோஷை, உடுமலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.