தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்ந்துள்ளார். 

இன்று காலை மிகச் சரியாக 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. அதன் படி, சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். மகர ராசியில் இன்று பெயர்ச்சி அடைந்த சனி பகவான், இன்று முதல் வரும் 20.12.2023 வரை வீற்றிருந்து பலன்களை அளிக்கிறார். 

இதனால், திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் இன்று சனிப் பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அங்கு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு சனீஸ்வர கோயிலில் பல விதமான சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அத்துடன், கொரோனா தொற்று தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதால் அந்த கோயிலில் உள்ள நள, பிரம்ம தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

அதாவது, “சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தமாக 12 ராசிகள் இருப்பதால், இந்த 30 ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால், இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படியாக, ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்தலையே, நாம் சனிப்பெயர்ச்சி” என்று கூறுகிறோம்.

மேலும், உலகப்பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் பரிகாரத் தலமான, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வர் கோயிலில் தான், ஒவ்வொரு சனிப்பெயர்ச்சி விழாவும் கலை கட்டும். இந்த கோயிலில், சனிகிரகத்தின் அதிபதியான சனிபகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

முக்கியமாக, சனி பரிகாரம் தளங்களில் முதன்மை தளமாக அந்த கோயில் புகழ் பெற்றுத் திகழ்கிறது.

இந்நிலையில், இந்தாண்டு சனிப்பெயர்ச்சி இன்று காலை முதல் வெகு விமர்சையாக நடைபெற்ற வருகறிது. தனுசு ராசியில் இருந்து மகர ராசி சனி பகவான், இன்று அதிகாலை மிகச் சரியாக 5.22 பெயர்ச்சி அடைந்தார். அதன் தொடர்ச்சியாக, சனி ஈஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கரிக்கப்பட்டு மஹர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

குறிப்பாக, “மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய பரிகார ராசிகாரர்களுக்கு சிறப்பு பூஜைகள்” இந்த ஆலயத்தில் நடைபெற்றன. இதற்காக, சனிப்பெயர்ச்சி விழாவானது, இந்த கோயிலில் இன்று கணபதி ஹோமத்துடன் சிறப்பாக தொடங்கியது.

இந்த சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்துக்கொள்ள புதுச்சேரி, தமிழ்நாடு மட்டும் இன்றி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அத்துடன், சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இந்த கோயிலில் தகுந்த இடைவெளியைப் பின்பற்றும் வகையில், பக்தர்களின் வசதிக்காக சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு வரிசை அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நுழைவாயிலில் கிருமிநாசினி பயன்படுத்துவதுடன், முக கவசமும் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதே போல், சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தேனி குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதனிடையே, நவகிரகங்களில் அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனி பகவான் என்பது குறிப்பிடத்தக்கது.