மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் விவசாய மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும், கடந்த சில தினங்களாகவே பெருமளவில் போராட்டங்களும் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியான அதிமுக ஆதரவு தந்துள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சியான திமுக, கடுமையாக இதை எதிர்க்கிறது. இந்த மசோதாக்களை ஆதரிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இனி தன்னை ஒரு விவசாயி என்று முன்மொழிய வேண்டாம் எனக்கூறி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவரை கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயம் பற்றி தெரியாததால் தான் ஸ்டாலின் விவசாய சட்டங்களை என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்துள்ள ஸ்டாலின், “வேளாண் சட்டங்களை எதிர்த்து பேசிய அதிமுக எம்பி எஸ் ஆர் பாலசுப்ரமணியனுக்கும் விவசாயம் பற்றி தெரியாதா? விவசாயி என்பவர் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ஆதரிக்க மாட்டார். விவசாயி என்பவர் விவசாயிகளின் திட்டமான கிசானில் முறைகேடு செய்ய மாட்டார். மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்து சொல்ல விவசாயியாக இருக்க அவசியம் இல்லை. வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவு, விவசாயிகள் நலனில் அன்பு, அக்கறை இருந்தாலே போதும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

வேளாண்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் மக்களவையில் நிறைவேறிய 3 மசோதாக்களுக்கும், இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் சிலவும் கூட இதை எதிர்க்கின்றன. ஆனால் நாடாளுமன்றத்தில் அதிமுக விவசாய மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தது. ``வேளாண் மசோதாக்கள் விவசாயிகள் மற்றும் கொள்முதல் செய்வோரை பாதிக்காது" என கூறிய தமிழக முதல்வர் பழனிசாமி இதற்கு ஆதரவு தெரிவித்திருந்ததை தொடர்ந்து, புதுவை முதல்வரும் இதற்கு எதிர் கண்டனங்களை தற்போது வைத்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு பிறகு முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ``மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு கார்ப்ரேட் முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. விவசாயிகளின் சந்தை,மண்டிகளை ஒழிக்கும் சட்டங்கள் இவை. மாநில அரசுகள் விவசாயிகளுக்கு தரும் மானியங்கள் தடுத்து நிறுத்தப்படும். புதுச்சேரியில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இணைந்து வரும் 28-ஆம் தேதி புதுச்சேரி,உழவர்கரை,பாகூர்,காரைக்கால் என பல்வேறு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்.

அப்போது, `விவசாய சட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு, ``மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை ஆதரிக்கும் தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியவில்லை. கார்ப்ரேட் முதலாளிகளின் கள்ள மார்க்கெட்டிற்கு தமிழக முதல்வர் ஆதரிக்கிறாரா?பதில் சொல்லட்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாராயணசாமியின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, ‘’திமுக தலைவரை திருப்திபடுத்த, நாராயணசாமிக்கு கைதேர்ந்த எத்தனையோ வழிகள் உள்ளன. அதைவிடுத்து தமிழக அதிமுக அரசை பற்றியோ, தமிழக முதலமைச்சர் பற்றியோ பேசுவதை நாராயணசாமி நாவடக்கத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் புதுச்சேரி மாநில அதிமுக தொண்டர்கள் நாராயணசாமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டியிருக்கும்’’ என்று புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் புதுச்சேரி சட்டமன்ற அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன்.

அவர் மேலும், ’’டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக அதிமுக அரசு, விவசாயிகளின் அரசு என்ற பெருமையை பெற்றுள்ளது. ஆனால் இரட்டை வேட திமுகவின் ஊதுகுழலாக செயல்படும் நாராயணசாமிக்கு புதுச்சேரி விவசாயிகளின் நலனில் துளியும் அக்கறையில்லை. குறைந்தபட்சம் தமிழக அரசு போல காவிரி கடை மடை பகுதியான காரைக்காலை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சட்டசபையில் நாங்கள் வலியுறுத்திய கோரிக்கையைக்கூட நிறைவேற்ற துணிவில்லாத, வேளாண் எதிரியான நாராயணசாமி புதுச்சேரியில் விவசாயிகள் நலனுக்காக ஒரு திட்டத்தைக்கூட செயல்படுத்தவில்லை.

விவசாயிகளைப்பற்றியோ, விவசாயத்தை பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாத நாராயணசாமிக்கு தமிழக அரசைப்பற்றியோ, தமிழக முதலமைச்சர் பற்றியோ பேசுவதற்கு எந்தவித அருகதையும் கிடையாது. குறுக்கு வழியில் பதவிக்கு வந்துவிட்டு, தனது முதலமைச்சர் நாற்காலி பதவி சுகத்திற்காக, புதுச்சேரி மாநில காங்கிரசை திமுகவிடம் அடகு வைத்துவிட்ட அக்கட்சியின் தலைவரை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக, வாய்க்கு வந்தபடி நாராயணசாமி பேசியுள்ளதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றும் தெரிவித்துள்ளார்