தமிழ் திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை போன்ற படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் ரசிகர்களை ஈர்த்தது. 

ராம் குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம், விஷ்ணுவின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது என்றே கூறலாம். தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான திரில்லர் படங்களில், இந்த படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படம் கேரளாவிலும் சக்கை போடு போட்டது. விஷ்ணு விஷாலின் கேரள மார்க்கெட் அதிகமாக இந்த படம் ஒரு முக்கிய காரணம். மலையாளத்தில் டப் செய்து ஒளிபரப்பப்பட்ட ராட்சசன் திரைப்படம் TRP-ல் அட்டகாசம் செய்தது.மேலும் கன்டென்ட் உள்ள படங்களுக்காக சிறப்பு முயற்சிகள் எடுத்து வருவதாகவும், எதிர்காலத்தில் ரசிகர்கள் தொடர்பு கொள்ளும் அளவிலான படங்களில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்தார். 

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். டீஸர் ஏற்கனவே வெளியானது. சமீபத்தில் யார் இந்த இர்ஃபான் அஹ்மத் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு. 

விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார். 

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் திரைப்படத்தில் நடித்துள்ளார் விஷ்ணு. ராணா ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து இயக்குனர் வசந்த பாலன் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் விஷ்ணு. 

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால், தனது திரைப்பயணம் பற்றியும், ரசிகர்களுடன் உரையாடல் என அடிக்கடி ட்வீட் செய்து வருவதை காண முடியும். இந்நிலையில் சமூக அக்கறையுடன் விஷ்ணு விஷால் செய்த காரியம் ஒன்று பாராட்டுகளை பெற்று வருகிறது. சாலையில் எல்லை மீறி ஓடும் காரில் இருந்து வெளியே எட்டி பார்த்து சிலுமிஷம் செய்த இளைஞர்களை வீடியோ எடுத்து ஹைதெராபாத் காவல் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார்.

விஷ்ணு விஷால் பகிர்ந்த வீடியோவை பார்க்கையிலே தெரிகிறது, சாலையில் இளைஞர்கள் செய்த சேட்டை பிற வாகன ஓட்டிகளுக்கும் தொந்தரவு தரும் வகையில் இருந்திருக்கும். இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்போம் என்று ஹைதெராபாத் காவல் துறை விஷ்ணுவிடம் உறுதி அளித்துள்ளது. படத்தில் மட்டுமல்லாது நிஜத்திலும் ஹீரோவாக திகழ்ந்த விஷ்ணு விஷாலை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.