பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு பயங்கர சம்பவமாக, 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவி, 6 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர நிகழ்வால், அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து, அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனால் பதறிப்போன மாணவிகளின் பெற்றோர், பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தே இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இப்படி, தமிழ்நாட்டையே, கடும் பீதியடைய வைத்த இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதே பொற்றாச்சி பகுதியில் அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் அரங்கேறி இருப்பது, அப்பகுதி மக்களை மீண்டும் பீதியடைய செய்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது, கொரோனா காரணமாக, தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.

இப்படியான நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த 15 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அந்த மாணவியை அவரது பெற்றோர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், “சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக” கூறி உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் “என்ன நடந்தது?” என்று சிறுமியிடம் விசாரித்து உள்ளனர்.

அப்போது, தனக்கு எப்படி இப்படி நேர்ந்தது என்று சரியாக கூட சொல்லத் தெரியாத அந்த அப்பாவி சிறுமி, “தனது வீடு இருக்கும் பகுதியைச் சேர்ந்த சிலர், சிறுமியிடம் ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி, மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக” கூறி அழுதிருக்கிறார். 

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் இது தொடர்பாக அங்குள்ள கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த வழக்கைப் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

இது தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விபரங்களைக் கேட்டறிந்து, சிறுமி வீடு இருக்கும் பகுதியில் சந்தேகத்திற்கிடமான 6 பேரை, போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்தனர். 

மேலும், “15 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா?” என்ற கோணத்திலும், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு 
வருகின்றனர். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த வழக்கு இன்னும் முடிவுக்குக் கூட வராத நிலையில், அதே பகுதியில் அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்திருப்பது, அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் பெண் பிள்ளையைப் பெற்ற பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.