தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர நிவர் புயல், கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து வருகின்றது. இந்தப் புயல் தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 250 கி.மீ. வேகத்திலும் சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் உள்ளது. 

தீவிர நிவர் புயலானது, அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. தீவிரமான பிறகு, புயலானது வடமேற்காக நகர்ந்து தமிழ்நாடு - புதுச்சேரி இடையே காரைக்கால் - மகாபலிபுரம் பகுதியில் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழையும், ஓரிரு பகுதிகளில் அதிதீவிர கனமழையும் பெய்யக் கூடும். இந்த மாவட்டங்களில் பெரும்பாலானவற்றுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளையில், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த நிவர் அதி தீவிரப் புயலானது கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 - 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சிலவேளைகளில் மணிக்கு 145 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழையின் தீவிரம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று (நவம்பர் 25) தெரிவித்துள்ளனர். நிவர் புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகின்றது. இதனால், இன்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

மேலும் தற்போது ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கனஅடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிவர் புயல் காரணமாக சென்னையிலிருந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிவர் புயல் எதிரொலியாக தமிழகத்தில் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. புயலால் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகின்றன. 

புயல் காரணமாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர் மழை காரணமாக சென்னையிலிருந்து செல்லும் 26 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையத்திலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி இன்று சென்னையிலிருந்து தூத்துக்குடி, திருச்சி, ஹூப்ளி, மங்களூர், பெங்களூரு, கோழிக்கோடு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேற்கொண்டு புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள, தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக, தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். மேலும் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்ற முதலமைச்சர், புயல் கண்காணிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.