நாகையில் 29 வயது இளைஞர் ஒருவர், 17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துத் தொடர்ந்து 5 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் திருமருகல் தெற்கு வெளி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் இருவரும், அங்குள்ள திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் துப்புரவுப் பணியாளர்களாக வேலைப் பார்த்து வருகின்றனர்.

பெற்றோர்கள் இருவரும் தினமும் வேலைக்குச் செல்லும் போது, தனது 17 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த இந்திரா என்ற ஒரு முதியவரின் வீட்டில் தனது மகளை பாதுகாப்பிற்காக விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் அதே பகுதியில் உள்ள ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் 29 வயதான ராஜேஷ் என்பவருடன், சிறுமிக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அத்துடன், ராஜேஷ் அந்த வீட்டிற்கு வரும் போதெல்லாம் குளிர்பானம் வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்து உள்ளான். அப்படி தான், அந்த சிறுமிக்கு ராஜேஷ் முதன் முதலாக கடந்த ஏப்ரல் மாதம் குளிர்பானம் கொடுத்து உள்ளார். அதை சிறுமி வாங்கி குடித்த அடுத்த சிறிது நேரத்தில், அவர் சுயநினைவை இழந்து உள்ளார். அப்போது, சிறுமிக்கேத் தெரியாமல், ராஜேஷ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான்.

பாலியல் இச்சையெல்லாம் தீர்ந்து போன பிறகு, ராஜேஷ் அங்கிருந்து சென்று விட்டான். அதன் பிறகு, அந்த 17 வயது சிறுமியும் கண் விழித்துப் பார்த்து உள்ளார். அப்போது, அவருக்கு உடல் வலி அதிகமாக இருந்து உள்ளது. அப்போது, தனக்கு உடல் வலி இருப்பதாக, அந்த பாட்டியிடம் சிறுமி கூறி உள்ளார்.

அதன் பிறகு, அடிக்கடி அந்த வீட்டிற்கு வரும் ராஜேஷ், அந்த சிறுமிக்கு எப்போதும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, அந்த சிறுமியை அவருக்கேத் தெரியாமல் பாலியல் பலாத்காரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். இப்படியே, கடந்த 5 மாதங்களாக அந்த சிறுமியை ராஜேஷ் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.

ஒரு கட்டத்தில் ராஜேஷ் மீது சிறுமிக்கு சந்தேகம் வந்துள்ளது. ஆனால், அது பற்றி சிறுமியால் அவனிடம் எதுவும் கேட்க முடியவில்லை. ஆனால், அந்த சந்தேகம் மட்டும் ராஜேஷ் மீது சிறுமிக்கு இருந்துகொண்டே இருந்து உள்ளது.

இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி அந்த சிறுமிக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பயந்துபோன சிறுமியின் தாயார், திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், சிறுமியிடம் இது குறித்து விசாரித்து உள்ளார்.

அப்போது, ராஜேஷ் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதை, சிறுமி கூறி அழுதுள்ளார். அதன் தொடர்ச்சியாகச் சிறுமியின் தாயார் நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜேஷ் மீது புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, ராஜேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவனை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.