சென்னை மயிலாப்பூர் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், 3 ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டு சுமத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழக பள்ளிக் கூடங்களில் இப்போது பாலியல் புகார்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது” 

நாள்தோறும் கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு என்பது, இதனால் பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

அதாவது, சென்னை கே.கே. நகரில் உள்ள புகழ்பெற்ற பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், சக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்து 

குற்றச்சாட்டில், போக்சோ சட்டத்தின் கீழ் அவர் அதிரடியாகச் சிறையில் அடுக்கப்பட்டு உள்ளார். இதே போல், சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்து உள்ளன. இதனையடுத்து, சென்னை, செங்கல்பட்டு என தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் அடுத்தடுத்து பாலியல் புகார்களில் வரிசையாகச் சிக்கி போக்சோ வழக்கில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், அந்த பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்கள் மீது பரபரப்பான பாலியல் புகாரைச் சுமத்தி இருக்கிறார்.

சென்னை மயிலாப்பூர் அலமேழுமங்கள் புரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் செயல்பட்டு வரும் பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் ஐயர் பள்ளியில், கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை படித்து உள்ளார். 

அப்போது, அந்த பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்த சிவக்குமார், வெங்கட்ராமன், ஞானசேகரன் ஆகிய 3 பேரும், தன்னிடம் வகுப்பறையில் பல முறை அத்துமீறி மிகவும் தவறாக நடந்து கொண்டதாக அந்த மாணவி தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

இந்த பாலியல் புகாரை, பாதிக்கப்பட்ட அந்த பெண், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் அளித்தார்.

இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட துணை ஆணையர், பரிந்துரை செய்ததின் பேரில் அனைத்து மகளிர் போலீசாருக்கு இந்த புகாரை அனுப்பி வைத்திருந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், “புகாருக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்கள், எத்தனை ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி 
வருகின்றனர் என்றும், இவர்கள் மீது மற்ற மாணவிகள் ஏற்கனவே அவர்கள் மீது பள்ளி நிர்வாகத்தில் புகார்  அளித்திருக்கிறார்களா?” என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், “பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த பள்ளியில் கண்காணிப்பு குழு உள்ளதா? என்றும், அப்படிப் பாதுகாப்பு இருந்தால், முறையாகச் செயல்படுகிறதா?” என்றும், போலீசார் விசாரணை நடத்தத் தொடங்கி உள்ளனர்.

சென்னையில் ஏற்கனவே பத்மசேஷாத்ரி பள்ளி, சேத்துப்பட்டு மஹரிஷி வித்யாமந்திர் பள்ளி என சில பள்ளிகள் அடுத்தடுத்து பாலியல் புகாரில் சிக்கிய நிலையில், தற்போது மேலும் ஒரு பள்ளி பாலியல் புகாரில் சிக்கி உள்ளது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.