பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம்  தமிழக அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்த  வேண்டும் என  கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணையை  பிறப்பித்திருந்தது.  இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரியும், ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்துமாறு உத்தரவிடக்கோரியும்  வழக்கறிஞர் எஸ்.பி.ராமமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.   

இந்நிலையில் 5 மாநில தேர்தல் நிறைவடைந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போது, இந்தியாவில் அடுத்தடுத்த நாட்களில் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. 22-ம் தேதி முதல் 19 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை ஒரு சில நாட்களை தவிர மீண்டும் மீண்டும் 75 பைசா வீதம் உயர்த்தப்பட்டது. கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 110.85 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 100.94 க்கும் விற்பனையானது.

கடந்த 3 நாட்களாக மட்டும் விலை உயராமல் இருப்பது ஆறுதல் அளித்தாலும், அதன் தாக்கம் தற்போது தான் தெரிய ஆரம்பித்துள்ளது. டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியவாசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் விலை போன்றவை உயர்ந்து வருகின்றனர். மேலும் கேஸ் மற்றும் எண்ணெய் விலை உயர்வால் உணவு விடுதிகளில் உணவுப் பொருட்களின் விலை மாற்றி அமைத்துள்ளனர் வியாபாரிகள்.

தற்போது பெட்ரோல் விலையை விட பீர் விலை குறைவாக உள்ள நிலையில், "டிரிங்க் பியர் டோண்ட் ட்ரைவ்" என பெண் ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் "alcohowl" என்ற பக்கத்தில் ஒரு பெண் "பீர் இப்போது எரிபொருளை விட மலிவானது" "பீர் குடி வாகனம் ஓட்டாதே" என்ற பதாகையை ஏந்தியபடி போஸ் கொடுத்திருந்தார். இந்த படம் ஏப்ரல் 7ஆம் தேதி தேசிய பீர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பு வழக்கறிஞர் அனைத்து ஆட்டோக்களிலும் எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டிருப்பதாகவும், பிரிண்ட் எடுக்க செலவாகும் என்பதால் அந்த கருவி மட்டும் பொருத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். இதனை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மீட்டர் பொருத்தியிருந்தாலும் அவை செயல்படுவதில்லை என்றும், பயணிகளுக்கு தங்கள் விருப்பம்போல் கட்டணம் வசூலிப்பதாகவும் வாதிட்டார்.

இந்நிலையில் இருதரப்பு வாதங்களையும்  கேட்ட  நீதிபதிகள், தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதால்,  ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் கட்டணங்களை மாற்றியமைக்கவேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.  பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப கட்டணம் தானாக  ஆட்டோ கட்டணம் மாறும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள்  ஆலோசனை வழங்கினர். அதேசமயம் மீட்டர் பொருத்தியும் அதனை செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய,  போக்குவரத்துத் துறையும் காவல்துறையும் திடீர் சோதனைகள் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர்.