“தமிழகத்தின் உள்ளே வர தேசியக் கட்சிகள் சூழ்ச்சி செய்கின்றன” என்று, அதிமுக கூட்டத்தில் பேசிய கே.பி.முனுசாமி அதிரடி காட்டி உள்ளார். 

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தைக் கிட்டத்தட்டத் தொடங்கி உள்ளது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, அந்த கட்சியினர் ஒருமனதாகத் தேர்வு செய்து, அதற்கான தேர்தல் வேலைகளையும் தொடங்கி உள்ளனர்.

அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே பாஜக, தனது கட்சியின் டெல்லி தலைமை தான், முதலமைச்சர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டே வருகிறது. இது தொடர்பான பிரச்சனை அந்த இரு கட்சிக்குள்ளும் புகைந்துகொண்டே இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதிமுகவின் தேர்தல் பிரசார தொடக்க பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டையில், இன்று நடைபெற்று வருகிறது. 

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 
“புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியைத் தொடரவும், புரட்சித் தலைவி ஜெயலலிதா உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி என்னும் தாரக மந்திரத்தின்படி நடைபெறும் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்திட வேண்டும்” என்று, குறிப்பிட்டு இருந்தனர்.

அதன் படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் அதிமுக வின் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த பிரச்சார பொதுகூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “தமிழகத்தை 30 ஆண்டுகளாக ஆண்ட ஒரே பெருமை அதிமுக வுக்கு உள்ளது” என்று, குறிப்பிட்டார். 

“தலைவர்கள் மறைவிற்குப் பின், மூன்றரை ஆண்டுக்காலம் தமிழகம் சிறப்பான ஆட்சியை அளித்து வருகிறது என்றும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் க்கு வாரிசுகள் இல்லை என்றும், கட்சியின் தொண்டர்கள் தான் அவர்கள் வாரிசு” என்றும், கூறினார். 

“எத்தனையோ பேர் கட்சியையும், ஆட்சியையும் விமர்சித்து கொண்டிருக்கின்றனர் என்றும், அவர்கள் தங்கள் வீட்டுக்காக உழைப்பவர்கள், ஆனால் அதிமுக நாட்டுக்காக உழைக்கும் ஒரே கட்சி” என்றும், பெருமையோடு குறிப்பிட்டார். 

“புல்லுறுவிகள், துரோகிகள் சிலர் இயக்கத்தை உடைக்க நினைத்தார்கள் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், தொண்டர்கள் நிறைந்த இயக்கத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும், இந்தியாவிலேயே தொண்டன் முதலமைச்சர் ஆகிய ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்” என்றும், அவர் பெருமிதமாக கூறினார்.

முன்னதாக பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி “அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்” என்று, உறுதிப்படத் தெரிவித்தார். 

“தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும், கூட்டணி ஆட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை” என்றும், திட்டவட்டமாகப் பேசினார். 

“அப்படி, அந்த எண்ணத்தோடு வரும் தேசிய கட்சி அதிமுகவுக்கு தேவையில்லை” என்றும், கே.பி.முனுசாமி அதிரடி காட்டினார்.

அத்துடன், “கலைஞர், ஜெயலலிதா இல்லாததால் ஆளுமை இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலர் பயன்பெறலாம் என நினைக்கின்றனர். எந்த தேசிய இயக்கத்தையும் தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தது திராவிட இயக்கம் தான்” என்றும், ஆவேசமாகப் பேசினார்.

தேசிய கட்சியான பாஜக உடன் அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசி உள்ள இந்த அதிரடியான பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்திலும், பாஜக மத்தியிலும் அதிகம் கவனம் பெற்றுள்ளது. முக்கியமாக, கே.பி.முனுசாமியின் இந்த பேச்சுக்கு, அதிமுக தொண்டர்கள் பலரும் நல்ல வரவேற்பு தெரிவித்துள்ளனர்.