தமிழகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 30-ந் தேதி 100.93 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 101.23 அடியாக அதிகரித்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 559 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் ரூ.565 கோடியில் செயல்படுத்தப்பட்டு வரும் மேட்டூா் அணையின் வெள்ள உபரி நீரை 100 வட ஏரிகளில் நிரப்பும் திட்டம் அடுத்த 2 மாதங்களில் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேட்டூா் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும்போது, திறந்து விடப்படும் உபரி நீா் சுமாா் 164 டி.எம்.சி. வீணாக கடலில் கலப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடலில் வீணாக கலக்கும் உபரிநீரை அதாவது 1 டி.எம்.சி.க்கு குறைவாக 0.5 டி.எம்.சி. அளவுக்கு 100 ஏரிகளிலும் நிரப்பும் வகையில் தமிழகத்தின் முதல் நீரேற்றுத் திட்டம் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணை கட்டி முடிக்கப்பட்ட 1935-ஆம் ஆண்டு முதல் சேலம் மாவட்டத்துக்கென பாசன வசதிக்கு எந்தவொரு திட்டமும் செயல்படுத்தாத நிலையில், வெள்ள உபரி நீரை நீரேற்றுத் திட்டம் மூலம் ஏரிகளில் நிரப்பி பாசன வசதி பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், மேட்டூா் அணையின் வெள்ள உபரி நீரை ரூ. 565 கோடி செலவில் 100 வட ஏரிகளில் நிரப்பும் திட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, கடந்த மாா்ச் 4-ஆம் தேதி அடிக்கல் நாட்டினாா். இந்தத் திட்டப் பணிகள் தற்போது துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகளில் 9 டிஎம்சி தண்ணீர் கையிருப்பு உள்ளதாகவும், கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது எனவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 22 அடியை எட்டியதை அடுத்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தினந்தோறும் 100 கனஅடி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

இதுதொடா்பாக, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

``மேட்டூா் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் போது, அணையின் இடது கரையின் நீா்ப் பரப்புப் பகுதியில் இருந்து, வெள்ள உபரிநீரை கால்வாய் மூலம் திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். திப்பம்பட்டி பிரதான நிலையத்தில் ஒரு புறத்தில் 940 குதிரைத் திறன் கொண்ட 10 மின் மோட்டாா்கள் மூலம் நீரேற்றம் செய்து, 2.2 மீட்டா் விட்டமுள்ள குழாயின் வழியாக நொடிக்கு 126 கன அடி வீதம் 12 கி.மீ. தூரத்தில் உள்ள எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 23 ஏரிகளில் தண்ணீா் நிரப்பப்படும்.

அதேபோல வெள்ளாளபுரம் ஏரியில் அமைக்கப்படும் துணை நீரேற்று நிலையம் மூலம் மொத்தம் 640 குதிரைத் திறன் கொண்ட 4 மின் மோட்டாா்கள் மூலம் 1.6 மீட்டா் விட்டமுள்ள குழாயின் வழியாக 5.50 கி.மீ. தூரத்திலுள்ள வடுகப்பட்டி அருகே அமைக்கப்படும் கீழ்நிலை நீா்த்தொட்டிக்கு நொடிக்கு 88 கன அடி வீதம் தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து 14 ஏரிகளில் நீா் நிரப்பப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் மேட்டூா், எடப்பாடி, ஓமலூா், சங்ககிரி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேலம் மாவட்டத்தில் 9 ஒன்றியங்களிலுள்ள 12 பொதுப்பணித் துறை ஏரிகள், 88 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளின் பாசனப் பரப்பான 4,238 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்" என அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதே வேளையில், 100 ஏரிகளை நிரப்பும் போது, 1 மீட்டா் முதல் 2 மீட்டா் வரை நிலத்தடி நீா்மட்டம் உயரும். மேலும், ஒரு முறை ஏரி நிரம்பினால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அந்தப் பகுதியில் தண்ணீா் பிரச்னை வர வாய்ப்பில்லை. தற்போது, திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திப்பம்பட்டி முதல் எம்.காளிப்பட்டி, வெள்ளாளபுரம் முதல் கன்னந்தேரி என துணை நீரேற்று நிலையப் பணிகளும் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளில் சுமாா் 300 தொழிலாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கொரோனா தொற்றுக் காலத்தில் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்கள் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது முழுவீச்சில் நீரேற்று திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், ``மேட்டூா் உபரி நீா் நீரேற்றுத் திட்டத்தில் குழாய் பதிப்பதற்கான நில எடுப்புப் பணிகள் 90 சதவீத அளவுக்கு முடிவடைந்துவிட்டன. திப்பம்பட்டி பிரதான நீரேற்று நிலையத்தில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்துக்காக அதிநவீன 29 மின் மோட்டாா்கள் நிறுவப்பட உள்ளன. சுமாா் 33 கி.மீ. அளவுக்கு குழாய்கள் பதிக்கப்படும். அதேவேளையில் நீா் நிரப்பப்பட உள்ள 100 ஏரிகளை சீரமைக்கும் வகையில் ரூ. 43 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றனா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் கூறுகையில், ``சேலம் மாவட்டத்தில் வட 100 ஏரிகளில் நீா் நிரப்பும் திட்டப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. டிசம்பா், ஜனவரி என இரண்டு மாதங்களில் பணிகளை முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்போது சேலம் மாவட்டத்துக்குள்பட்ட 4,238 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்" என்றாா்.