தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கோரிக்கை எழுந்தது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டது.
இதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் , தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். 
மேலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.


1. தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் மணி மண்டபத்தில், முழுவுருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும்.


2. பணிக் காலத்தில் பத்திரிகையாளர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து வழங்கப்பட்ட மருத்துவ நிதி உதவி 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, ஒரு லட்சம் ரூபாயாக 1.8.2018 அன்று முதல் உயர்த்தி வழங்கிட நான் ஆணையிட்டேன். இம்மருத்துவ நிதி உதவி 2 லட்சம் ரூபாயாக தற்போது உயர்த்தி வழங்கப்படும்.


3. தூத்துக்குடி மக்களால் 'மக்களின் தந்தை' என போற்றப்படுபவரான ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸின் சேவையைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15 ஆம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும். அச்சமயம் தூத்துக்குடி, பாளையங்கோட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
1. நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை

1. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும், உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத் தொகை 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

உயர் கல்வித் துறை

உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி சாதனை படைத்த ஜெயலலிதாவைச் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்திற்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிட்டு, அவ்வளாகத்தில் ஜெயலலிதாவின் உருவச் சிலை அமைக்கப்படும்.