கே.டி. ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ வெளியான விவகாரத்தில், பாஜக வின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை “விசாரணை குழு அமைத்து” உத்தரவிட்டு உள்ளார்.

பாஜக வின் தமிழ் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம் பெற்றதாகக் கூறப்படும் பாலியல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக பாஜகவில் இணைந்த ஊடகவியலாளர் மதன், தான் நடத்தி வரும் “மதன் டைரி” என்கிற யூட்யூப் சேனலில், “பாஜகவில் உள்ள சில தலைவர்கள், பெண்களிடம் அத்து மீறி நடக்கின்றனர் என்றும், அதுவும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கின்றனர் என்றும், இதில் 15 தலைவர்கள் இது போன்ற செயலில் ஈடுபடும் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும்” குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில், “பாஜக மாநில பொறுப்பில் உள்ள கே.டி. ராகவன், ஒரு பெண் நிர்வாகியிடம் எப்படி நடந்துகொள்கிறார் என்று  பாருங்கள்” என்று,  ந்த வீடியோவை அவர் வெளியிட்டு இருந்தார். 

இது தமிழக பாஜகவிற்குள் பெரும் பூதாகாரமாக வெடித்த நிலையில், பாலியல் தொடர்பான வீடியோ வெளியானதால் வேறு வழியின்றி,  “தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக” கே.டி. ராகவன் தெரிவித்து உள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்து உள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளார். 

அந்த அறிக்கையில், “இந்த விவகாரத்தை வெளியிட்ட நபருக்கு உள் நோக்கம் இருக்கலாம்” என்றும், அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், “இந்த விவகாரத்தை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், என்னைச் சந்தித்துப் பேசியது உண்மை என்றும், முதல் முறையாக கட்சி அலுவலகத்தில் அவர் என்னைச் சந்தித்துப் பேசிய போது, கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கேட்டுக்கொண்டார்” என்றும், கூறியுள்ளார்.

“இந்த குற்றச்சாட்டில் உண்மை இருக்கும்பட்சத்தில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் உறுதியளித்தேன் என்றும், ஆகவே அந்த வீடியோ பதிவுகளை தங்களிடம் காட்சிப்படுத்தினால் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம்” என்று, நான் கூறினேன்” என்றும், அவர் பதில் அளித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.

“ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ மட்டும் நம்பி, அதன் உண்மைத் தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன் மேல் விசாரணை செய்யாமல் குற்றம்சாட்டும் நபரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?” என்றும்,

பின்னர், “அவர் 3 வது முறையாக கேட்டபோது, கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும் காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்” என்றும், குறிப்பிட்டுள்ளார். 

“அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நான் இந்த வீடியோ பதிவுகளை வெளியிடப்போவதாக குறுஞ்செய்தியில் எனக்கு அவர் கூறினார்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

இப்படியாக, “குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதில் நான் உறுதியாக இருந்ததால. 'செய்துகொள்ளுங்கள்' என்று நான் சுருக்கமாக முடித்துவிட்டேன்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“இது தொடர்பாக காலை கே.டி. ராகவனிடம் பேசியபோது, 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சிப் பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் எண்ணத்துடன் உயர் தொழில் நுட்பத்தில் தன் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும், இதைத் தான் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாகவும் கே.டி. ராகவன் தெரிவித்தார் என்றும், கட்சியின் மாண்பையும் செம்மையையும் கருதி கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்தார்” என்றும், அண்ணாமலை விளக்கம் அளித்து உள்ளார்.

மேலும், “இதேபோல, மதன் ரவிச்சந்திரன் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில் இதுபோல இன்னும் பல நபர்களின் பதிவுகளும் வெளிவரவிருக்கிறது என்று சொல்லியிருப்பது அவருக்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது” என்றும், அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.