சொத்துக்களை அடைய அக்காவையும் அவரது குழந்தையையும் கொடூரமாக கொலை செய்த தங்கையை போலீசார் அதிரடியாகக் கைது செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்ற நபருக்கு சுமதி மற்றும் சுஜாதா என்று 2 மகள்கள் இருந்தனர். இந்த 2 மகள்களுக்கும் அவர் வரண் பார்த்து முறைப்படி திருமணம் செய்து வைத்து உள்ளார். அவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில், இளைய மகள் சுஜாதா பிரசவத்திற்காக தாய் வீட்டிற்குச் சென்று உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மூத்த மகள் சுமதி, தனது ஒரு வயது மகள் ஸ்ரீநிதியுடன் அம்மா வீட்டிற்கு வந்து உள்ளார். 

அப்போது, அவரது தந்தை சின்னசாமி கூலி வேலைக்காகப் பெங்களூருக்கு சென்றிருந்தார். அவர்களது தாயார் மயில், தங்களுக்கு சொந்தமான வயலில் வேலை பார்க்கச் சென்று உள்ளார். இதனால், வீட்டில் அக்கா சுமதியும், தங்கை சுஜாதாவும் தங்கள் குழந்தைகளோடு இருந்து உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் போல் சுமதி, தன் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில், வீட்டில் இருந்தபடியே வெளியே ஓடி வந்து உள்ளார். அதே நேரத்தில், வீட்டிற்குள் தீயில் எரிந்த நிலையில் அவரது குழந்தை ஸ்ரீநிதியும் அலறி துடித்து உள்ளார். 

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அம்மா - மகள் ஆகிய இருவர் மீதும் தீ பற்றி எரிந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், உடனடியாக ஓடி வந்து தீயை அனைத்து உள்ளனர். அதன் பிறகு, ஆம்புலன்ஸ் வரவழைத்து, சிகிச்சைக்காக அங்குள்ள வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் சுமதி கொண்டு செல்லப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில், பலத்த காயமடைந்த குழந்தை ஸ்ரீநிதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அன்றைய தினம் வீட்டில் இருந்த சுமதியின் தங்கை சுஜாதாவிடமும், அவரது பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளன்.

விசாரணையின் தொடக்கத்தில், “மகள் சுமதிக்கு பேய் பிடித்ததால், தன்னைத்தானே கொடுவாளால் வெட்டிக் கொண்டும், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தும் கொண்டதாக” அவரது தந்தை காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.

ஆனால், “என் மனைவி சுமதி மண்ணெண்னை ஊற்றி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், சம்பவத்தன்று சுமதிக்கும் வீட்டில் இருந்த அவரது தங்கை சுஜாதாவிற்கும் சண்டை நடந்துள்ளது” எனவும், சுமதியின் கணவர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார். 

அதன் பிறகு, போலிசார் மேற்கொண்ட விசாரணையில், “சுமதியின் தந்தை சின்னசாமி சொந்தமாக 20 சென்ட் நிலம் வாங்கியுள்ளதாகவும் அதனை பெறுவதில் சுமதி மற்றும் சுஜாதா இருவர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில், சுமதி மற்றும் சுமதியின் ஒரு வயது குழந்தை ஸ்ரீநிதியையும் அரிவாளால் வெட்டி விட்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி சொந்த தங்கை சுஜாதா கொலை செய்தது” தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார் அக்காவையும், அக்கா மகளையும் கொடூரமாக கொலை செய்த சுஜாதாவை, வரஞ்சரம் போலிசார் அதிரடியாக கைது செய்தனர். 

இதனிடையே, சொத்திற்காக சொந்த அக்காவையும், அவரது ஒரு வயது மகளையும் சொந்த தங்கையே கொலை செய்த சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.