தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு கூறியது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், `ஏழு தமிழர்களை பரோலில் விடுவிக்க வேண்டும் - ஓபிசி மாணவர்களுக்கான  மருத்துவக்கல்வி- அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்களை வழங்கவேண்டாம்' போன்ற கோரிக்கைகளும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழுவிவரம் இங்கே...

``பாஜக நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.

நவம்பர் 6ஆம்  தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு தமிழ்நாட்டில்  வேல் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருந்தது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் பொது முடக்கம் இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படாத நிலையில், அரசியல் நடவடிக்கைகளை அரசு  அனுமதிக்காத சூழலில் இந்த வேல் யாத்திரைக்கான அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் காவல்துறை தலைமை இயக்குனரை சந்தித்து அவரிடம் இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என கடிதமும் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் வெவ்வேறு ஊர்களில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களை மதக்கலவரமாக மாற்றுவதற்கு எப்படியெல்லாம் பாஜக முயற்சித்தது,  அவற்றைக் காவல்துறை எவ்வாறு தடுத்தது என்பதையெல்லாம் குறிப்பிட்டதுடன், பாஜகவின் நோக்கம் தமிழ் நாட்டில் மத ரீதியான கலவரம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதுதான் என்பதையும், அதற்கு இந்த சம்பவங்களே சான்றுகளாக இருக்கின்றன என்பதையும்  சுட்டிக்காட்டி,  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தால் மீண்டும் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வரக்கூடும்.  அப்போதும் அனுமதி கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தையும் அவர்கள் நாடக் கூடும். அங்கெல்லாம் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு 7.5% வழங்க அரசு ஆணை பிறப்பித்தது போல; வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று முடிவெடுத்தது போல;  7 தமிழர் விடுதலையிலும்,  மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கும் விஷயத்திலும் தமிழக அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆளுநர் முடிவெடுக்கும் வரை காத்திருக்காமல் அந்த ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் ஏழு பேரையும் உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

அத்துடன், முன்னேறிய சமூகப் பிரிவினருக்கு (EWS) 10 % இட ஒதுக்கீடு வழங்கும்  சட்டத்தை எட்டே நாட்களில் இயற்றிய பாஜக அரசு, மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்க கொள்கை முடிவு எடுக்கவில்லை என ஆறு ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறது. அதனால்  பல்லாயிரக்கணக்கான ஓபிசி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பை இழந்துள்ளனர்.  எனவே, மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரை அகில இந்திய தொகுப்புக்கான 15 %  இடங்களை நாங்கள் தரப்போவதில்லை என்ற முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும். இதன் மூலம் ஓபிசி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 50% இட ஒதுக்கீடு கிடைத்துவிடும்.

தமிழக ஓபிசி மாணவர்களின் எதிர்காலம் கருதி தயக்கமின்றி இந்த முடிவை எடுக்குமாறு தமிழக முதல்வரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்"

என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.