நிவர் புயலின் தாக்கத்தை குறித்து, கேட்டறிய சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு இன்று (நவம்பர் 25) காலை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அங்கு புயல் கண்காணிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ``புயல், மழையால் நான்காயிரத்து 133 இடங்கள் பாதிக்கப்படும் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3000 -க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 25) புதன்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மட்டும் பணிபுரிவார்கள்" எனக் குறிப்பிட்டார்.

மேலும் பேசிய முதல்வர், மழை பெய்வதை பொறுத்து தான் செம்பரம்பாக்கம் நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீரை திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும், 22 அடியை தாண்டினால் உபரிநீர் திறந்துவிடப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

முன்னதாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இருமாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை நகராட்சி நிர்வாகம், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையத்தில் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
 
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ``பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு துறைகளின் விவரங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து நடைமுறை ஆய்வு செய்து, ஓரிடத்தில் இருந்து அதிகளவு விவரங்களை கையாளும் வகையில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு மையம் மழையளவு, சுற்றுச்சூழல் தன்மை, வெள்ளத்தை கண்காணிக்கும் உணர்வு கருவி, திடக்கழிவு மேலாண்மை மற்றும் வாகன நிறுத்த மேலாண்மை ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி முதல் தொடங்கியது. இன்று (நேற்று) 38.7 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. இதுவரை 90 மரங்கள் விழுந்து அவை உடனடியாக அகற்றப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் 5.9 செ.மீ. அளவு மழை பெய்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 176 நிவாரண மையங்களில் 77 மையங்கள் தயார்நிலையில் உள்ளன.

இன்றைய (நேற்றைய) மழையால் 5 இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. மேலும், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 15 மண்டலங்களிலும் 570 மோட்டார் பம்புகள், மின்சார கம்பம், அறுந்து தொங்கும் மின்கம்பிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகளை மழை காலங்களில் சேதம் அடையாமல் இருப்பதை கண்காணிக்க குழு, 52 இடங்களில் களத்தில் நின்று பணிபுரிய தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள், மாநகர பேரிடர் மீட்பு குழுக்கள், மீட்பு குழுக்கள் தயார்நிலையில் உள்ளன"

என்றார். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியபோது, அவருடன் அந்நிகழ்வில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், துணை கமிஷனர் ஜெ.மேகநாத ரெட்டி, உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.

இந்நிலையில், நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் தமிழகம் வந்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நிவர் புயல் தமிழகத்தின் கடலூரை நெருங்கி வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் பாதிப்பில் இருந்து தப்பிக்க மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் சென்னை மற்றும் திருச்சிக்கு வந்துள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 10 ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். நிவர் புயல் வரும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க 32 மாவட்டங்களிலும், சென்னையின் 15 மண்டலங்களிலும் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரவு பகலாக கட்டுப்பாட்டு மையமம் இயங்கிவருகிறது. இந்த மையத்தில் இருந்து அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் பழைய கட்டிடங்களில் உள்ளவர்கள் அரசின் நிவாரண மையத்திற்கு வர வேண்டும். அரசு சார்பில் 4,733 முகாம்களில் மொத்தம் 13 லட்சம் பேர் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 987 முகாம்களில் 24,166 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் 8 குழுவினர் 2 படகுகளுடன் சென்னை வர உள்ளனர்.

பாசன ஏரிகளில் 1,579 ஏரிகள் கொள்ளளவை எட்டியுள்ளன. அவை 24 மணி நேரமும் கண்காணிப்பட்டு வருகின்றன. மேட்டூர், பூண்டி, பாவனி சாகர், செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவை பாதுகாப்பாக உள்ளன.

சென்னையில் 53 இடங்களில் நீர் தேங்கியிருந்தது. அதில் 8 பகுதிகளில் நீர் முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது. மீதம் உள்ள 45 இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அதை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புயல், சூறாவளி நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். அதனை தொடர்ந்து சில நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். அதனால் மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலின் கண் பகுதி கடக்கும் முன் சில நேரங்களில் வேகம் குறைந்து அமைதியாக காணப்படும். அதனால் புயல் கடந்துவிட்டது என எண்ண வேண்டாம். அரசு அதிகார பூர்வமாக புயல் கடந்துவிட்டது என அறிவிக்கும் வரை மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை கருத்தில் கொள்ள வேண்டாம். அதிகாரப்பூர்வ தகவல் IMD இணையதளம் மற்றும் ஊடங்கங்களில் வரும் அந்த தகவல்களை மட்டும் மக்கள் நம்ப வேண்டும்.

25 ஆம் தேதி இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் 26 ஆம் தேதி காலை புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வருகிறது. இதனையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த புயலை வெற்றிகரமாக கடந்து செல்வோம். தற்போது சென்னைக்கு 350 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது " எனக்கூறினார்.