இந்தியாவை சுற்றி வளைக்க சீனா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய பகுதிக்கு உட்பட்ட லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே கடந்த 16 ஆம் தேதி நடைபெற்ற பயங்கர மோதலில், இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில், இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து, எல்லையில் நடந்த மோதல் தொடர்பாக ஆலோசிக்கவும், அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் பேசி முடிவு எடுக்கவும் பிரதமர் மோடி தலைமையில், காணொலி காட்சி மூலம் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் நமது ராணுவத்திற்கு இருப்பதாக” கூறினார்.

அத்துடன், “புதிதாகக் கட்டப்பட்டுள்ள நிலைகளால், இந்திய ராணுவத்தின் கண்காணிக்கும் திறன் கூடியிருப்பதாகவும்” சுட்டிக்காட்டிய அவர், “ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக் கூடிய திறன் நமது ஆயுதப் படைகளுக்கு உள்ளது” என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இதனையடுத்து, சீனா தனது 10 ஆயிரம் ராணுவ வீரர்களை இந்திய எல்லையில் குவித்த நிலையில், அதற்குப் பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை எல்லையில் குவித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய எல்லைப் பகுதியில் போர் விமானங்களை விமானப்படை தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்தன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரு தரப்பு பேச்சு வார்த்தையில் இரு தரப்பிலும் எல்லையில் இருந்து ராணுவம் பின் வாங்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியாவின் மேற்கு எல்லையான பாகிஸ்தான் எல்லையில் சீனா தற்போது, தன் முழு கவனத்தையும் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீரை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதிகளில், பாகிஸ்தான் சாலைகள் அமைக்க சீனா உதவி செய்து வருகிறது. அந்த பகுதியில் 30 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களைச் சீனா மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதையே காரணமாக வைத்து, அந்த பகுதியில் விமான நிலையம், ரயில் பாதை, சாலை ஆகியவற்றை அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா தற்போது உதவி செய்து வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கொடுக்கும் போது, சீனாவும் தன்னை ராணுவ ரீதியாக, அந்த பகுதியில் பலப்படுத்தி வருகிறது. 

ஏற்கனவே, சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித் தடம் வழியாகப் பயணிக்கிறது. தற்போது, இதன் மூலமும் இந்தியாவை சுற்றி வளைக்க சீனா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும், பாகிஸ்தான் எல்லையில் சீனா 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என்றும், சொந்த நிறுவனங்களின் பாதுகாப்புக்காக, தனியாக ஒரு  பிராந்தியத்தையே சீனா உருவாக்கி உள்ளது என்றும், அந்த குறிப்பிட்ட பகுதிகளில் பாகிஸ்தானியர்கள் கூட அனுமதிக்கப்படுவது இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் கட்டுமான பணியில் சுமார் 30 சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது என்றும், ராஜஸ்தான் எல்லையில் சீன நிறுவனங்கள் எண்ணெய் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணியில் சுமார் 2 ஆயிரத்து 500 சீன நிபுணர்கள் மேற்கொண்டு வருவதாகவும், ராஜஸ்தான் எல்லைக்கு 8 கிலோ மீட்டர் தூரத்திலேயே எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியில் சீன நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, அந்த எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் சீனாவின் மண்டாரின் மொழி கற்பிக்கப்படுவதாகவும், இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்ற சைலேஷ் ராய் தெரிவித்துள்ளார். 

மேலும், குறிப்பிட்ட ராஜஸ்தான் எல்லை பகுதியில், பாதுகாப்பு பொறுப்பை சீன ராணுவமே கவனித்து வருவது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, ராஜஸ்தான் எல்லைப் பகுதியில், இந்திய அரசும் தன் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ஆலோசனைகள் கூறி வருகின்றனர்.

அத்துடன், 2 ஆம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்திய 75 ஆம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள மாஸ்கோ சென்று திரும்பிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது 3 நாள் ரஷிய பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார். இதனையடுத்து, ராணுவ தளபதி நரவானே சந்தித்து அவர் எல்லைப் பிரச்சனையில் தற்போது உள்ள சூழல் குறித்து கேட்டறிந்தார். மேலும், இந்திய படைகளின் தயார் நிலை குறித்தும், ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.

இதனையடுத்து, லடாக் எல்லையில் நிலைமையை மாற்ற முயல்வது சரியான வழி அல்ல என்றும், அது விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும், சீனாவுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, “சீன ஆக்கிரமிப்பை எப்படி, எப்பொழுது மோடி அரசு அகற்றப்போகிறது என்ற கேள்விக்கு ஏன் இதுவரை பதில் இல்லை?” என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.