சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன் சாத்தானின் கூடாரமாக திகழ்ந்து வந்ததாக இதற்கு முன்பு அந்த போலீஸ் ஸ்டேசன் சென்று வந்தவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.

அமெரிக்காவின் மின்ன பொலிஸ் நகரில் “ஜார்ஜ் ஃபிளாய்டு” என்ற கருப்பின இளைஞர் ஒருவர், விசாரணை என்ற பெயரில் காவல் துறை அதிகாரி கீழே தள்ளி முழங்காலால் கழுத்தை மிதித்தில், மூச்சு விட முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், அமெரிக்காவை மட்டும் இல்லாமல், உலகையே புரட்டிப் போட்ட போட்ட நிலையில், அந்த கொலையில் சம்பந்தப்பட்ட அமெரிக்க போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

அதேபோன்ற ஒரு சம்பவம் தான் பாரம்பரியம் பண்பாட்டுக் கலாச்சாரம் பேசும் நம்ம தமிழ்நாட்டில் தற்போது நிகழ்ந்துள்ளது, நெஞ்சை பதைபதைக்கச் செய்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு விதி முறைகளை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி, இருவரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், தந்தை - மகன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார், அவர்களைக் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். 

இதனையடுத்து, அன்று இரவே பென்னிக்சுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. மறுநாள் காலை தந்தை ஜெயராஜூம் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து சிறையிலேயே உயிரிழந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால், கடும் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி வியாபாரிகள், 
ஊர் மக்கள் அனைவரும், சாத்தான் குளத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, தூத்துக்குடியில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் - மகனும் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலையத்தில் இருவருக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் நேற்று வெளியானது. குறிப்பாக, இருவரின் ஆசன வாயில் போலீசார் லத்தியை உள்ளே விட்டு கடும் சித்திரவதை செய்து கொடுமைப் படுத்தியதாவதாகவும், ஜெயராஜ் - பென்னிக்ஸ் உறவினர்கள் போலீசார் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த செய்தி, காட்டுத் தீ போல் உலகம் முழுவதும் பரவியது. இதனால், கொந்தளித்த பிரபலங்கள் தங்களது கண்டனத்தைக் கடுமையாகப் பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில், “சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேசன் சாத்தானின் கூடாரமாக இதற்கு முன்பு திகழ்ந்ததாகவும், ஸ்டேசன் வந்தாலே அடி, உதை, குத்து, லத்தி என ஸ்டேசனே போர்க்களம் போல் இருக்கும்” என்று, இதற்கு முன்பு அந்த போலீஸ் ஸ்டேசன் சென்று வந்தவர்கள் தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு சாட்சியாக, ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான் குளம் காவல் நிலையத்தின் முதல் தள அறையில் பூட்டி வைத்து கண் மூடித்தனமாக தாக்கியது குறித்து, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர் அமுதுண்ணாகுடியைச் சேர்ந்த இசக்கியும், அவரது நண்பரும் பேசிக்கொண்ட ஆடியோ தற்போது வெளியே கசிந்துள்ளது.

அதன்படி, “ கடந்த 19 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கைது செய்யப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவரையும், 20 ஆம் தேதி மதியம் 2.30 மணி அளவில் தான் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, சாத்தான் குளம் அரசு மருத்துவர் “வினிலா” தந்தை - மகன் இருவரையும் பரிசோதனை செய்து உடல் தகுதி சான்றிதழ் கொடுத்துள்ளார்.

கோவில்பட்டி அரசு மருத்துவர் “வினிலா” சிறையில் அடைக்கலாம் என்று, உடல் தகுதி சான்றிதழ் கொடுத்த பிறகே, உடல் நலமின்றி தந்தை - மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். 

சாத்தான் குளத்தை அடுத்த பேய்க்குளத்தைச் சேர்ந்த மகேந்திரனின் சகோதரர் துரையை கொலை வழக்கில் தேடிவந்த போலீசார், அவர் கிடைக்காததால், மகேந்திரனை அழைத்துச் சென்றுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தாக்கப்பட்டதால், அடுத்த 2 நாட்களில் மகேந்திரன் மரணம் அடைந்ததாகவும்” தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

“ஜெயராஜ் - பென்னிக்ஸை தாக்கிய அதே எஸ்.ஐ.க்கள் அடித்த அடி தான், தன்னுடைய கணவரின் தற்கொலைக்குக் காரணம் என்று தென்காசியை சேர்ந்த அவரது மனைவி ஜமுனா பாய், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது, அந்த வழக்கில் டி.எஸ்.பி தலைமையிலான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜாசிங் என்பவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய உடலிலும் காயங்கள் இருப்பதால், தனி விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தற்போது உத்தரவிட்டுள்ளது” போன்ற பல்வேறு விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், “ஜெயராஜ் - பென்னிக்ஸை தாக்கிய பிறகு, போலீசார் அவர்களை மருத்துவமனை அழைத்துச் செல்லும் போதும், மருத்துவமனையில் இருந்து சிறைக்கு அழைத்துச் சென்றபோதும், அவர்கள் உடன் இருந்த அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களும், அவர்கள் எப்படித் தாக்கப்பட்டனர், உடலில் எந்த பகுதியில் இருந்தெல்லாம் ரத்தம் கசிந்தது என்றும், விரிவாகப் பேசி வருகின்றனர்.

இப்படியாக, சாத்தான் குளம் போலீசாருக்கு எதிராகப் பலரும் தற்போது போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதில், ஜெயராஜ் - பென்னிக்ஸை தாக்கிய போலீசாருக்கு நிகராக, ஜெயராஜ் - பென்னிக்ஸை காப்பாற்றத் தவறியதாக சாத்தான் குளம் பெண் மருத்துவர் “வினிலா” மீதும் தற்போது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

உள்ளூர் டீ கடை முதல், உலகம் முழுவதும் உள்ள டிக்டாக் வரை தற்போது பேசப்படும் ஒரு விசயம், சாத்தான் குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸை லாக்கப் டெத் விவகாரமாகவே இருக்கிறது.

இதன் காரணமாக, “போலீஸ் உங்கள் நண்பன்!” என்ற வசனம் மாயமாகி, சாத்தான்குளம் பயங்கரம் ஒட்டுமொத்த காவல் துறையின் மீதான மக்களின் பார்வையானது, தரம் குறைந்து மாறி உள்ளது” குறிப்பிடத்தக்கது.