விடாமல் துரத்தும் புரேவி புயலால் 12 மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்க காத்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த நவம்பர் தொடக்கம் முதலே வட கிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாகப் பெய்து வருகிறது. நவம்பர் மாத இறுதியில் ‘நிவர்’ புயலை எதிர்கொண்ட தமிழகம், அதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி டிசம்பர் ஒன்றாம் தேதி அது ‘புரெவி’ புயலாக மாறியது.

தமிழகத்தில் நிவர் பயலின் தாக்கத்தினால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்கள் கொட்டி தீர்த்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியது. நிவர் புயல் மழையால் ஏற்பட்ட வெள்ள நீர் வடிவதற்குள், தென் மேற்கு வங்கக்கடலில் புரெவி என்ற புதிய புயல் உருவெடுத்து, தமிழகத்தை மிரட்டியது. 

இலங்கையின் கிழக்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த புரெவி புயல், கடந்த 2 ஆம் தேதி இரவு இலங்கையில் திரிகோணமலையைத் தாக்கி விட்டு அதன் தொடர்ச்சியாக அந்த புரெவி புயல் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு நகர்ந்தது. இந்த புரெவி புயல் பாம்பனுக்கும் - கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடந்து பின்னர் அரபிக்கடலுக்குச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இலங்கையைக் கடந்த புரெவி புயல் சற்று திசை மாறி வடமேற்கு நோக்கி பயணித்துக் கடந்த 3 ஆம் தேதி பாம்பன் அருகே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு ஒரே இடத்தில் நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் என படிப்படியாக வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதியில் நகராமல் நிலைகொண்டிருந்தது. இது தற்போது வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டிருக்கிறது. புரெவி புயலின் வலு சற்று குறைந்தாலும், தமிழகத்தில் பரவலாக மழை விட்டு விட்டுப் பெய்து வருகிறது. 

சென்னையில் இன்று காலையில் ஒரு சில இடங்களில் விட்டு, விட்டு மழை பெய்தது. மழை விட்ட சில நிமிடங்களில் அவ்வப்போது சூரியன் தலைக்காட்டி விட்டுத் தான் செல்கிறது. மழை, வெயில் என மாறி, மாறி வானம் காட்சி கொடுத்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் காவிரி டெல்மா மாவட்டங்களில் இன்னும் முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்த நிலையில் தான் தமிழகம், புதுச்சேரியில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இது தொடர்பாக தென் மண்டல வானிலை துறை தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட புதிய அறிவிப்பில், “மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியான, இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலைகொண்டுள்ளது” என்று, குறிப்பிட்டுள்ளார். 
 
“இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார்.

இன்றைய நிலவரப்படி செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்றும், பிற மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்றும், அவர் தெரிவித்துள்ளார். 

“சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என்றும், அவர் கூறியுள்ளார்.