வாழ்ந்து மறைந்தவர் அல்ல
மறைந்து வாழ்பவர்!
வெளிச்சம் தரும் விளக்கு போல
நிழலை தரும் விருட்சம் போல
கொடுத்தே பழகியவர்
மக்கள் களத்தில் உயிரை கொடுத்த
பெருந்தினத்தின் முதலாமாண்டு
நினைவு தினம் இன்று!
பிரம்மாண்ட வாழ்வு கண்ட 
புன்னகை மன்னருக்கு
புகழ் வணக்கம்!

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எச். வசந்த குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று, அவரது மணிமண்டபத்தைத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திறந்து வைத்தார்.

வசந்த் அன் கோ உரிமையாளரும், கன்னியாகுமரி எம்.பி.யாகவும், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு செயல் தலைவராகவும் புகழ் பெற்று திகழ்ந்தவர் எச்.வசந்த குமார்.

“மளிகைக் கடை முதல் மக்களவை வரை, தன்னுடைய அயராது உழைப்பாள் உயர்ந்தவர் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார். அவரது வாழ்க்கையை ஒரு முறை திரும்பிப் பார்த்தால், அதில் உள்ள ஒவ்வொரு படிக்கட்டுகளும் வியர்வை துளிகளால் கட்டப்பட்ட வெற்றிப்படிக்கட்டுகளாக” நிமிர்ந்து பார்க்க வைக்கும். 

இப்படியாக, தமிழகத்தின் புதிய அடையாளமாகத் திகழ்ந்த 70 வயதான காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி இரவு 7 மணி அளவில், நுரையீரல் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வசந்தகுமார் உயிரிழந்ததற்கு குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், அப்போதைய முதலமைச்சர் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர். 

பின்னர், அவரது உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைந்து, முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அந்த இடத்தில் வசந்தகுமார் பெயரில் புதிதாக மணிமண்டபம் கட்டப்பட்டு, அவரது சிலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று, வசந்தகுமாருக்கு மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கி, மணிமண்டபத்தைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் விஜய்வசந்த் எம்.பி., வசந்தகுமாரின் மனைவி தமிழ் செல்வி, மகன் வினோத் குமார், மகள் தங்கமலர் ஜெகநாத், மருமகன் ஜெகநாத், மருமகள்கள் நித்யா, சிந்து உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் வசந்தகுமார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், பாமக. தலைவர் ஜி.கே. மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பேசினார்கள். 

இந்த நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மயூரா ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், தாரகை கத்பட், காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் டாக்டர். பினுலால் சிங் உள்பட பலரும் கலந்து கொண்டனர். 

இவர்களுடன் பல்வேறு கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, மறைந்த வசந்தகுமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.