“பொருத்தம் சரியில்லை” என்று ஜோதிடர் கூறியதால், காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாத விரக்தியில் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூரை சேர்ந்த மயில்சாமி தனது உறவுப் பெண்ணை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இவர்களது காதல் விசயம் இருவரின் வீட்டிற்கும் தெரிந்த நிலையில், பிள்ளைகளின் விருப்பத்திற்காக, இருதரப்பு பெற்றோரும் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்திருந்து உள்ளனர். 

அதன் படி, இருவர் வீட்டின் சார்பிலும், திருமணத்திற்கு ஜாதகம் பார்க்கும் படலம் நடைபெற்றது. அப்போது, இருவருக்கும் பொருத்தம் சரியில்லை என்று, ஜோதிடர் கூறி இருக்கிறார். 

இதன் காரணமாக, இரு வீட்டாரின் பெற்றோரும் இந்த திருமணத்திற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், நடைபெற இருந்த திருமணம் வைபோகம் அப்படியே நின்றது. இதில், தனது காதலியைத் திருமணம் செய்துகொள்ள முடியாமல் கடும் மனமுடைந்த மயில்சாமி, கடந்த சில நாட்களாக யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான மயில்சாமி, தனது வீட்டின் அருகே உள்ள 90 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனால், பதறிப்போன அவரது பெற்றோர், கதறித் துடித்தனர். அத்துடன், அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்தியூர் தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உடலில் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, அவரது உடலானது, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.