கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்.

திமுக எம்.எல்.ஏ.வும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் கடந்த 2 ஆம் தேதி, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

DMK MLA J Abhagan has passed away

அங்கு, அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையாக்கப்பட்டு வந்தது. மேலும், சிறுநீரக கோளாறு, தீவிர மூச்சுத் திணறல் காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் 90 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

இதனிடையே, தீவிர சிகிச்சைக்குப் பிறகு, அடுத்த 2 நாட்களில் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு அவருக்கு 40 சதவீத ஆக்சிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மீண்டும் கடந்த 8 ஆம் தேதி மாலை முதல் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவனை நிர்வாகம் கூறியது. 

அப்போது, “ஜெ.அன்பழகனின், சிறுநீரக கோளாறு மோசமடைந்தது மட்டுமின்றி, இதய செயல்பாடும் மோசமாக உள்ளதாக” மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜெ.அன்பழகன் தற்போது உயிரிழந்துள்ளார்.