“ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புரெவி புயல், ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே கரையை கடக்கும்” என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புரெவி புயல் இலங்கையின் திருகோணமலை வழியே கரையை கடந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் முற்றிலும் வலுவிழந்தது. இதனால், அந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. 

அங்கு, ராமநாதபுரத்திற்கு தென் மேற்கே சுமார் 40 கிலோ மீட்ர் தொலைவில் உள்ள பாம்பனுக்கு 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நீடித்துக்கொண்டே இருக்கிறது. 

இப்படி, பல மணி நேரமாக ஒரே இடத்தில் நீடிப்பதால் மிக கன மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தற்போதைய நிலையில், புரெவி புயல் இலங்கையின் திருகோணமலை வழியே கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து காணப்படுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பாம்பனில் இருந்து தென் மேற்கு திசையில் நகர்ந்த புரெவி புயல், மெதுவாக நகர்ந்து அடுத்த 6 மணி நேரத்தில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அந்த புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மேலும் வலுவிழக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் எனவும், ஒரு சில இடங்களில் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

முக்கியமாக, புரெவி புயல் வலுவிழந்தாலும் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த 6 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மழை இன்னும் 6 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புரெவி புயல் காரணமாகத்  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி, வடலூரில் கனமழை. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை செய்யத் தொடங்கியது.

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக 40 மணி நேரமாக கமமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு நேரம் முதல் காலை வரை மழை சற்று விட்டிருந்த நிலையில், மீண்டும் சாரல் மழை பெய்யத் தொடங்கி உள்ளது.

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் 
குறிப்பிட்டு உள்ளது.

அது போல், புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி விமான நிலையம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நண்பகல் 12 மணி வரை மூடப்பட்டு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன், புரெவி புயல் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “மின்கம்பங்கள், மின்கம்பிகள், தெருவிளக்குகள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு அருகில் செல்லவோ, அவற்றைத் தொடவோ வேண்டாம் எனவும், பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் மரங்களுக்கு கீழ் ஒதுங்கி நிற்க வேண்டாம்” என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மிக முக்கியமாக, புரெவி புயல் காரணமாக இன்றைய தினம் முன்னெச்சரிக்கையாக 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் இன்றைய தினம் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.