திண்டுக்கல் அருகே காதலித்து நெருக்கமாக இருந்து திருமணம் செய்ய யோசித்த காதலனைக் கண்டித்து, கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்து உள்ள கொக்குபட்டியை சேர்ந்த வேலுச்சாமி மகள் 20 வயதான சுகன்பிரியா, திண்டுக்கல் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். 

இப்படிப் படிக்கும் போது, அதே ஊரைச் சேர்ந்த தனியார் வங்கியில் பணியாற்றும் 24 வயதான முத்துக்குமார் என்ற இளைஞருடன், சுகன்பிரியாவுக்கு அறிமுகம் ஆகி நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு, பின் நாட்களில் காதலாக மலர்ந்து உள்ளது.

முத்துக்குமார் - சுகன்பிரியா இருவரும் காதலிக்க ஆரம்பித்த பிறகு, அந்த பகுதியில் காதல் ஜோடிகளாக வலம் வந்து உள்ளனர். இதனால், அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஊர் சுற்றியதாகத் தெரிகிறது. அப்பொழுது, காதலர்கள் இருவருக்கும் இடையே நெருக்கமான பழக்கமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக, சுகன்பிரியா தன் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் வீட்டில் திருமண பேச்சு அடிப்பட்டு உள்ளது.

இதனால், “என்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி” முத்துக்குமாரிடம், சுகன்பிரியா கூறி உள்ளார். ஆனால், முத்துக்குமார், திருமணம் செய்துகொள்ளச் சம்மதிக்காமல், காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால், சந்தேகம் அடைந்த காதலி சுகன்பிரியா, அங்குள்ள நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று சுகன்பிரியா, “என் காதலனை என்னுடன் சேர்த்து வையுங்கள்” என்று கூறி, புகார் மனு ஒன்றைக் கொடுத்து உள்ளார். புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா, சுகன்பிரியாவின் காதலன் முத்துக்குமாரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

பேச்சு வார்த்தையில், “திருமணம் குறித்து முடிவெடுக்க எனக்கு இன்னம் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்” என்று, முத்துக்குமார் போலீசாரிடம் கூறி உள்ளார். இதனைக்கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சுகன்பிரியா, காதலன் தன்னை கழற்றி விடப் பார்க்கிறான் என்று கூறிக்கொண்டே, அங்கிருந்து அழுதபடியே புறப்பட்டுச் சென்று விட்டார். 

அதன் பிறகு, சிறிது நேரத்தில் மீண்டும் காவல் நிலையம் முன்பு வந்த சுகன்பிரியா, கையில் மண்ணெண்ணெய் கேனுடன் அங்கு வந்து நின்றுள்ளார். இதனையடுத்து, காவல் நிலையம் முன்பு, தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றித் தீக்குளிக்க முயன்று உள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே அங்கு ஓடி வந்து, சுகன்பிரியா தற்கொலை செய்துகொள்ளாமல் தடுத்து நிறுத்தினர். அத்துடன், அவர் உடம்பின் மீது, அங்கிருந்த தண்ணீரை எடுத்து ஊற்றினர். 

இதனையடுத்து, சுகன்பிரியாவை காவல் நிலையம் உள்ளே அழைத்துச் சென்று மீண்டும் விசாரித்து உள்ளனர். 

அப்போது, “காதலன் முத்துக்குமார், என்னைக் காதலித்து நெருக்கமாக இருந்துவிட்டு, தற்போது திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றுகிறார்” என்று, மீண்டும் புகார் அளித்துள்ளார்.

சுகன்பிரியா கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், முத்துக்குமாரை கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு, முத்துக்குமார் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேடசந்தூர் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே, மகளிர் காவல் நிலையம் முன்பு கல்லூரி மாணவி தீக்குளிக்க முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.