தொழிலதிபரை பண்ணை வீட்டில் கட்டி வைத்து சொத்துக்களை எழுதி வாங்கிய புகாரில், உதவி காவல் ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன்,  உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“வேலியே பயிரை மேய்ந்த கதையாக” சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி, தமிழ்நாட்டு மக்களையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், சென்னையில் பல்வேறு தொழில் செய்து வருகிறார்.

தொழிலதிபர் ராஜேஷ், தனக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்றை வாங்கி, ஓய்வு நேரங்களில் அங்கு வசித்து வந்தார்.

இப்படியான நேரத்தில், அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு,  தொழிலதிபர் ராஜேஷ்க்கு சொந்தமான பண்ணை வீட்டில், அவரை கட்டி வைத்து காவல் துறையை சேர்ந்த சில முக்கிய அதிகாரிகள், அவருக்கு சொந்தமான சில சொத்துகளை எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு எழுந்த இந்த குற்றச்சாட்டு புகார் தொடர்பாக, தொழிலதிபர் ராஜேஷ் காவல் உயர் அதிகாரிகளிடம் நேரமியாகச் சென்று புகார் அளித்தார். ஆனால், இந்த புகார் தொடர்பாக கடந்த 2020 ஆம் அண்டு தான், இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

அத்துடன், இந்த வழக்கில் காவல் துறையில் பலரும் சம்மந்தப்பட்டு இருப்பதால், இந்த வழக்கு, அதிரடியாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.

அதன் படி, கடந்த 6 மாதங்களாக இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில், மிகத் தீவிரமாக விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல் துறையினர், தற்போது இந்த வழக்குத் தொடர்பாக சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.

குறிப்பாக, தொழிலதிபர் ராஜேஷை கட்டி வைத்து சொத்தை எழுதி வாங்கிய புகாரில், உதவி காவல் ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன்,  உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட 6 முக்கிய காவல் துறை உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்டு இருப்பதை கண்டுப்பிடித்து, அந்த 6 காவல் துறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 10 பேர் மீது, சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், ஒட்டுமொத்த தமிழக காவல் துறையினர் மத்தியலும், பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.