தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வர இருக்கும் நிலையில், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கூட்டணிக் கட்சிகள் பற்றிய விவாதங்கள், வலுப்பெற்று வருகின்றது. இதில், தமிழகத்தில் ``பாஜக பங்கேற்கும் கூட்டணி அரசு தான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும்" என அதன் மாநிலத் தலைவர் எல்.முருகன் அண்மையில் கூறியிருந்தார்.

இதற்கிடையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ``வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது" எனக் கூறியிருந்தார். இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து வந்த சூழலில், எனில் பாஜக அதிமுகவோடு கூட்டணி அமைக்குமா இல்லையா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாஜக தலைவர் முருகன், அதிமுக வெற்றி பெறாது எனில், ரஜினி மாற்றாக இருப்பாரா என்ற கேள்விக்கு, ஆம் என்று பதில் அளித்தார்.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து பாஜக தற்போதே செயல்படத் தொடங்கி விட்டதாகக் கூறும் அரசியல் விமர்சகர் ரவீந்தரன் துரைசாமி, அதிமுகவிற்கு மாற்றாகத் தமிழகத்தில் ஒரு தலைமையை உருவாக்க பாஜக விரும்புவதையே இது காட்டுவதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில் ''சில மாதங்களில், சட்டசபைத் தேர்தலுக்காக, தேர்தல் களம் அழைக்கிறது; தமிழகத்தை மீட்டு, தி.மு.க., ஆட்சியை உருவாக்க வேண்டும். பத்தாண்டுக் காலத்தில், தமிழகம் எல்லா வகையிலும் பின்தங்கி விட்டது. இதிலிருந்து தமிழகத்தை மீட்க, தி.மு.க., ஆட்சியை உருவாக்க வேண்டும்'' என, அக்கட்சியின் தலைவர், ஸ்டாலின் பேசினார்.

``இல்லை, அதிமுக தான் மீண்டுமொரு ஆட்சி அமைக்கும்" என்று அக்கட்சியைச் சேர்ந்த அன்வர்ராஜா பேசியிருந்தார்.

தமிழகத்தில் இன்னும் ஒன்பது, பத்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டே போகிறது. இதற்கிடையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் காய்களை நகர்த்தி வருகின்றன. அந்த வகையில் தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்கான பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பல்வேறு திரை பிரபலங்களைத் தனது கட்சியில் இணைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, உதயா, சமுத்திரம், அலைபாயுதே உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவரும், உதயா, பிஸ்தா, ரிதம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவருமான பிரபல தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் பாஜகவில் நேற்றைய தினம் இணைத்துக் கொண்டார்.

இணைந்த பிறகு பேசிய பிரமிட் நடராஜன், ``பாஜகவில் இணைந்ததில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி கிடைத்துள்ளது. அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போது தர்மம் கடவுள் ரூபத்தில் தலைகாக்கும். அப்படி இப்போது கடவுள் மோடி ரூபத்தில் பூமிக்கு அதர்மத்தை அழிக்க வந்திருக்கிறது.

எனக்கு இருக்கின்ற நல்ல பெயர் , தொடர்புகளை பாஜகவிற்காகப் பயன்படுத்துவேன். ராமராக இருக்கக்கூடிய பிரதமர் மோடிக்கு ஒரு அணிலாக என்னால் இயன்ற பணியைச் செய்வேன்" எனப் பேசியிருக்கிறார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர்தான், பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, பலர் பாஜகவில் இணைந்தார்கள், இன்னும் பலர் பொறுப்பு பட்டியலில் அமரவைக்கப்பட்டார்கள். அப்படி எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் கீதா, முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்திருந்தார். அதேபோல திமுக, அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த  நடிகர் ராதா ரவிக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினிகாந்த்தின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா மற்றும் இசையமைப்பாளர், கங்கை அமரன் ஆகியோரும் தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஆர்.கே.சுரேஷ் மாநில OBC அணிக்கு மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இயக்குநர் பேரரசு, பெப்சி சிவா, தீனா ஆகியோர் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவுக்கு மாநிலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தார். அரசு தொடர்பு பிரிவுக்கு ஓய்வு பெற்ற சந்திரலேகா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார்.

நடிகர் ராதா ரவி, மதுவந்தி,கெளதமி, விஜயகுமார், குட்டி பத்மினி, நமீதா, ஜெயலட்சுமி ஆகியோருக்கு மாநில செயற்குழு உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல கஸ்தூரி ராஜா, கங்கை அமரன் இருவருக்கும் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர்கள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்.  கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநிலச் செயலாளர்களாக பெப்சி சிவா, தீனா,பேரரசு, பாபு கணேஷ், அழகன் தமிழ்மணி நியமிக்கப்பட்டுள்ளனர். 

இன்னொரு பக்கம், சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஆதரவும் பாஜகவுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஒருவேளை ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்கும்பட்சத்தில், அவருக்கு பாஜக துணை நிற்கும் என்று எதிர்பார்க்கவும் படுகிறது. காரணம், பாஜகதான் ரஜினியை இன்றைய தேதிக்குச் சிறந்த மாற்றாக இன்றுவரை பார்க்கிறது. அதேபோல ரஜினியும், மோடி அரசின் மீதோ - பாஜக மீதோ இன்றுவரை மிக இணக்கமாக இருந்துவருகிறார்.

ஆக, பிற கட்சிகளோடு ஒப்பிடுகையில் அரசியல் சூழலுக்கு முழு தயார் நிலையில் இருப்பது பாஜகதான்! 

இந்த நட்சத்திரங்களோடு கைகோர்க்கும் முன்னெடுப்பில், பாஜக எந்தளவுக்குப் பலனை அடையும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- பெ.மதலை ஆரோன்