ஆவின் கூட்டுறவுச் சங்க மோசடி விவகாரத்தில்,  தலைவர் பாண்டி, துணைத் தலைவர் கே. பரமானந்தம் ஆகியோர் கைது செய்யாமல் அவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோரின் ஆதரவு இருப்பதாகவும், பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவரான சு.ஆ.பொன்னுசாமி இன்று (23/07/2020) வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்ட பால் திட்டப்பணியாளர்கள் (ஆவின்) கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 2017-18ம் நிதியாண்டில் 7.92கோடி ரூபாய் கையாடல் செய்த புகாரின் அடிப்படையில் சுமார் இரண்டு ஆண்டுகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் பால் முகவர்கள் சங்கத்தின் சார்பிலும், ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர்கள், ஆவின் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழக அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் முன் வைத்து வந்த நிலையில் அச்சங்கத்தின் செயலாளர் மதலையப்பன், கணக்காளர் ஜெகதீசன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அம்பை எய்தோர் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் அம்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மோசடி புகாரில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்களான அச்சங்கத்தின் தலைவர் பாண்டி, துணைத் தலைவர் பரமானந்தம் ஆகியோர் கைது செய்யாமல் அவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோரின் ஆதரவு இருப்பதால் தான் அவர்கள் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருவதாகவும் சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் அந்த சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக ஆவின் கூட்டுறவுச் சங்கத்தில் சுமார் 7.92கோடி ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தின் முக்கிய புள்ளிகளான அச்சங்கத்தின் தலைவர் பாண்டி, துணைத் தலைவர் பரமானந்தம் ஆகியோரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல் மோசடி செய்த மேற்கண்ட இரு நபர்களையும் 6மாதங்களுக்குத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மட்டும் கடந்த சில தினங்களுக்கு முன்  (21.07.2020) கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காகச் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருடர்களாகி பத்து, நூறு என சில திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்து பின்னி பெடலெடுத்து லாக்கப் மரணங்கள் வரை கொண்டு செல்லும் காவல்துறை தமிழக அரசின் கூட்டுறவுத் துறையில் சுமார் எட்டு கோடி ரூபாய் வரை கையாடல் செய்த மோசடி பேர்வழிகளைச் சுதந்திரமாக உலாவ அனுமதித்திருப்பதின் மூலம் சட்டம் தவறிழைக்கும் ஆட்சியாளர்களையும், அவர்கள் சார்ந்த கட்சியினரையும் கண்டு கொள்ளாது என்பதையும், அமைச்சர் பெருமக்களின் ஆதரவு தாராளமாக இருப்பதையும் உறுதி செய்கிறது.

எனவே பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு அமைப்பான ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் சேமிப்பைச் சுரண்டிய கயவர்கள் ஆட்சியாளர்களின் தலையீடுகளைக் கடந்து அவர்கள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டும், அத்துடன் அவர்கள் மோசடி செய்த தொகை முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டு கூட்டுறவுச் சங்கத்தின் கணக்கிற்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

மேலும் கோவிட் -19 கொரோனா நோய்த் தொற்று பேரிடர் காலமான தற்போது மிகவும் பொருளாதாரமின்றி தவிக்கும் பணம் செலுத்திய ஓய்வு பெற்ற ஆவின் ஊழியர்களுக்கு உடனடியாக பணம் திரும்ப வழங்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

-பெ.மதலை ஆரோன்.