தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும். அந்த வகையில் விஜய் சேதுபதி மற்றும் மாதவனுக்கு தரமாக அமைந்த படம் தான் விக்ரம் வேதா. புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. 

Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பை பெற்றது. நடிகர் மாதவன் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக இந்த படம் அமைந்தது. 

திரை விரும்பிகள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட இந்த படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆக ரெடியாகிக் கொண்டிருக்கிறது. ஒரு கேங்ஸ்டர் படம் தரமாக இருந்தால் பெரிய அளவு சாதிக்கும் என்பதற்கு விக்ரம் வேதா ஒரு எடுத்துக்காட்டு. விக்ரம் வேதா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து மற்றவர்களை அடக்குவது போல் இருக்கும். அந்த பகுதி கொஞ்சம் காமெடியாகவும் எடுக்கப்பட்டிருக்கும். கிளைமாக்ஸ் காட்சியின் ஃபார்முலாவை மாற்றிய படம் என்றே கூறலாம். 

இன்றோடு இந்த படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை ரசிகர்களோடு கொண்டாடும் வகையில் படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தை அசத்தி வருகிறது. படத்தின் வெற்றிக்கு பின்னணி இசையும் முக்கிய காரணம். காட்சிகளுக்கு ஏற்றார் போல் BGM-ஐ கச்சிதமாக வடிவமைத்திருப்பார் சாம் சி.எஸ். 

இதே போன்ற அற்புதமான படைப்புடன் மீண்டும் புஷ்கர் காயத்ரி வரவேண்டும் என ரசிகர்கள் கேட்டு கொண்டு வருகின்றனர். இந்த படத்தை தயாரித்த சஷிகாந்த் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகிய ஜகமே தந்திரம் படத்தை தயாரித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ளார் விஜய் சேதுபதி. மாதவன் கைவசம் சைலன்ஸ் மற்றும் சார்லி ரீமேக்கான மாறா திரைப்படம் உள்ளது.