பட்டாசு, பலகாரம், புதுத்துணி, வரிசையான விடுமுறைகள் என கொண்டாட வைக்கும் பண்டிகை தான் தீபாவளி. இந்த தீபாவளி நேரத்தில் புதுப்படம் என்பதும் எமோஷன் தான். அரக்கப் பரக்க உணவை முடித்துக் கொண்டு வரிசைகளில் காத்திருந்து டிக்கெட்டுக்கு போராடி, நமது ஃபேவரைட் ஹீரோவை பெரிய திரையில் பார்ப்பதே ஒரு தனி சந்தோஷம் தான். 

Tamil Movies Releasing On Diwali Day

தமிழ் சினிமாவிற்கும் இந்த தீபாவளிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1944 தீபாவளியின்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் வெளியாகி, அது மூன்று தீபாவளியைக் கடந்து ஓடியது. அன்று தான் இந்த தீபாவளியின் மகிமை புரியத்துவங்கியது. வெகுநாட்கள் பிறகு வந்த கிழக்கே போகும் ரயில் ஒரு வருடம் ஓடியது. தமிழ் சினிமாவில் உன்னதமான நடிகர் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படமும் ஒரு தீபாவளி அன்றுதான் வெளிவந்தது. தமிழ் சினிமாவுக்கு நடிப்பு தீபத்தை ஏற்றி வைத்த சிவாஜியின் முதல் படம் தீபாவளிக்கு வந்தது சிறப்புதானே...

கமல் நடித்த கல்யாண ராமன், ரஜினி நடித்த எங்கேயோ கேட்ட குரல் படங்களுக்குக் கூட ஒரே மேடையில் அட்லாண்டிக் ஹோட்டலில் விழா நடத்தினார் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம். எம்ஜிஆர், சிவாஜி ரசிகர்கள் எல்லாம் சந்தோஷமாக இருந்ததற்குக் காரணம், அவர்களின் படங்கள் தீபாவளிக்கு எப்படியாவது ரிலீஸ் ஆகி விடும் என்பதுதான். அந்த நம்பிக்கையை அவர்கள் பொய்ப்பிக்க விட மாட்டார்கள். இப்போது ஒரு படம் ரிலீஸ் ஆனால் 1000 தியேட்டர்களுக்கு மேல் வெளியிடுகிறார்கள். இரண்டு படங்கள் வந்தால், மற்ற படங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் ஆகி விடுகிறது. அந்த காலத்தில் இது போன்ற பிரச்சனைகளை எப்படி சரி செய்தார்கள் என்பது ஆச்சர்யம் தான். 

Tamil Movies Releasing On Diwali Day

இப்போது இருக்கும் ஆன்லைன் புக்கிங் ஏதும் அந்த காலத்தில் இல்லை. முதலில் வருவோருக்கு டிக்கெட். கால் கடுக்க வரிசையில் நின்று நம்மை திரையரங்கிற்கு கூட்டிச்சென்ற பெருமை நமக்கு முன்னாள் இருந்த தலைமுறையையே சேரும். அந்த காலத்தில் டிக்கெட்டுகளின் விலை குறைவாக இருந்தது. அதாவது நியாயமாக இருந்தது. பின் பிளாக் டிக்கெட் எனும் எமன் பிறக்க, விலையும் உயர்ந்தது. வியர்வையும் அதிகமானது. 

ஓடிடி-யில் ஓடிச்சென்று படம் பார்த்த விமர்சகர்கள் அன்று இல்லை. அக்காலத்தில் ரசிகர்களே விமர்சகர்கள். இதற்கு நல்ல உதாரணம் முதல் மரியாதை திரைப்படம். சுதந்திர தினத்தில் வெளியான இப்படம் அந்த ஆண்டு தீபாவளி தாண்டி ஓடிய சாதனை எல்லாம் நம்ம் ஊரு டென்டுகொட்டாவிற்கு உண்டு. திரையரங்கை திருவிழாவாக மாற்றிய தருணம் சூப்பர்ஸ்டார் நடித்த முத்து திரைப்படம் வெளியான போது. 

மண்தரை துவங்கி ஐமாக்ஸ் வரை தீபாவளியும் தமிழ் சினிமாவும் ஒரு எமோஷன் தான். நமக்கு பிடித்த நடிகர்களின் ஓப்பனிங் சீன் வரும் போது, தீபாவளி பலகாரம் செரிக்க .... தலைவா என்கிற சத்தத்தோடு டிக்கெட்ட கிழிச்சு போடுறப்போ ஒரு சந்தோஷம் வரும் பாருங்க....