தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை சித்ரா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடித்த அபூர்வ ராகங்கள் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஊர்காவலன், கே.எஸ்.ரவிக்குமாரின் சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், பொண்டாட்டி ராஜ்ஜியம் & நடிகர் பாண்டியராஜனின் கோபாலா கோபாலா உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை சித்ராவின் நடிப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை சித்ரா.

மேலும் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் சின்னத்திரையில் மெகா தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிரபல இணை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என்றும் மக்களால் அழைக்கப்பட்ட நடிகை சித்ரா திடீரென இன்று காலமானார் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

தமிழ்-மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சித்ரா மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 56. இன்று மாலை 4 மணியளவில் சாலிகிராமத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை சித்ராவின் மறைவுக்கு தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.