“கொரோனாவுக்கு ஆண்களென்றால் ரொம்ப இஷ்டம், ஆண்களையே குறிவைத்த அதிக உயிர் பலி கேட்பதாக” ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. 

உலகையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று நோய். 

தற்போது, கொரோனா 3 வது அலையாகத் தனது கோர முகத்தைத் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் காட்டத் தயாராகி வருகிறது.

ஆனாலும், இந்த கொடிய கொரோனா பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகின்றன. 

குறிப்பாக, “கொரோனா உயிரிழப்புகள் தொடர்பாக நடத்தப்பட்ட சில ஆய்வுகளில் பெண்களை விட, ஆண்களே அதிக அளவு பாதிக்கப்பட்டது” தெரிய வந்திருக்கிறது. 

இது தொடர்பாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையின் படி, “4 ல் 3 பங்கு ஆண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பதாக” குறிப்பிடப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, “மற்ற உலக நாடுகளின் அறிக்கையின் படி, பெண்களை விட ஆண்களே கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர்கள் இறப்பதாகவும்” அதில் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், “உலகின் சில நாடுகளில், கொரோனா பாதிப்பால் ஆண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதும், இன்னும் சில நாடுகளில், ஆண்கள் பாதிக்கப்படுவதை விட, இறப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும்” அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. 

இதற்கு முக்கிய காரணமாக, “ஆண்களிடம் உள்ள புகைப் பழக்கம், மதுப் பழக்கம் உள்ளிட்ட செயல்பாடுகளே முக்கிய காரணம் என்றும், இதனால் நீரிழிவு, புற்று நோய் போன்று உடலில் ஏற்கனவே இருக்கும் நோய்கள் மற்றும் மரபணு மாற்றங்கள் கூட அதற்கு காரணமாக” இருக்கலாம் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“ஏற்கனவே, நுரையீரல் பிரச்சனை இருப்பவர்களிடம் புகைப் பழக்கமும் சேர்ந்து கொள்வதால் அதன் பாதிப்பு இன்னும் மோசமடைகிறது என்றும், மதுப் பழக்கமும் 
கொரோனாவிற்கு எதிரி தான்” என்றும், அதில் சுட்டக்காட்டப்பட்டு உள்ளது. 

“இந்த பிரச்சனைகளை எல்லாம் ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும், உலக சுகாதார அமைப்பும் தற்போது வலியுறுத்தி இருக்கிறது.

மிக முக்கியமாக, சீனாவில் பெண்களைவிட இரு மடங்கு ஆண்கள் கொரோனாவிற்கு பலியானதையும், அதில் 52 சதவீத ஆண்கள் புகைப்பழக்கம் உடையவர்களாக 
இருந்ததையும் அந்த ஆய்வு அறிக்கையில் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.