“ டாஸ்மாக்கை மூட முடியாமல் போனது வருத்தம் அளிப்பதாகவும் இருந்தாலும், விவாகரத்து கேட்டு வந்த 1000 தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளது மன நிறைவைத் தருகிறது” என்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசி உள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், பணியில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறார். 

இன்றைய தினம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்றைய தினமே வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. 

இந்த விழாவில் நீதிபதி என். கிருபாகரன் கலந்துகொண்டு பேசும்போது, “என் தந்தை நடேசகவுண்டர் 4 ஆம் வகுப்பு வரைதான் படித்தார். ஆனால், எங்கள்
கிராமத்தில் பள்ளிக் கூடம் கொண்டு வருவதற்கு மிக கடுமையாக அவர் உழைத்தார்” என்று, குறிப்பிட்டார். 

“ஒரு நாள் நீ மிகப் பெரிய ஆளாக வருவாய் என்று என்னை வாழ்த்தினார்” என்றும், குறிப்பிட்ட அவர், “என் தந்தை செய்த கல்வி சேவையால் தான், நான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்” என்றும், அவர் பெருமையோடு குறிப்பிட்டார்.

அத்துடன், “பொது மக்களின் கடைசி புகலிடம் இந்த நீதிமன்றம் தான் என்றும், ஆகவே வழக்கறிஞர்கள் சரியாக இருந்தால் நீதித்துறை இன்னும் சிறப்பாகச் செயல்படும்” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார். 

“அப்படி இல்லை என்றால், நீதி பரிபாலனத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும், இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களில் பலர் வழக்கறிஞர்கள்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“ஆனால், இப்போது வழக்கறிஞர் என்றாலே வீடும், பெண்ணும் கொடுக்க மறுக்கின்றனர் என்றும், இதனால் ஒவ்வொரு இளம் வழக்கறிஞரும், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும்” என்றும், அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், “குடும்பநல வழக்குகளை நான் விசாரித்ததன் மூலம், என்னிடம் விவாகரத்து கேட்டு வந்த 1000 தம்பதிகளை இது வரை நான் சேர்த்து வைத்துள்ளேன்” என்றும், நெக்குருகிப் பேசினார்.

“இந்த செயல்பாடு எனக்கு முழுமையான மன திருப்தியை அளிக்கிறது என்றும், இதுவே எனக்கு பூர்ண மன நிறைவைத் தருகிறது” என்றும், அவர் பெருமையோடு குறிப்பிட்டார்.  

அதே நேரத்தில், “ஒற்றை பெற்றோர் கட்டுப்பாட்டின் கீழ் வளரும் குழந்தைகளின் நிலைமை மிகவும் மோசமானதாக அமைந்து விடுகிறது” என்றும், அவர் கவலையோடு சுட்டிக்காட்டினார்.

“அப்படியான அந்த குழந்தைகளின் நடவடிக்கையே வித்தியாசமாக இருக்கும் என்றும், அது மிகவும் பரிதாபத்திற்கு உரியது” என்றும், அவர் கவலையோடு குறிப்பிட்டார்.

“125 வயதுடைய உயர் நீதிமன்ற கட்டிடத்தில் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன்” என்று தனது நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவர், நான் வழக்குகளை மனசாட்சிப்படி விசாரித்துத் தீர்ப்பு வழங்கினேன்” என்றும் கூறினார். 

“நீதிபதியாகப் பணி ஓய்வு பெறுவது திருப்தியாக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை முறைப்படுத்த முடியாதது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முடியாமல் போனது எனக்கு மன நிறைவை அளிக்கவில்லை” என்றும், தனது நிறைவேற ஆசைகளையும், நீதிபதி கிருபாகரன் வெளிப்படையாகவே பேசினார். நீதிபதி கிருபாகரனின் இந்த பேச்சு, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.