திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் ரிச்சர்ட் எம் நாதன். வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பானா காத்தாடி, கோ, வணக்கம் சென்னை, நான் சிகப்பு மனிதன், அப்பா, தொண்டன், கோமாளி போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். 

இந்நிலையில் ஒளிப்பதிவாளரான ரிச்சர்ட் எம் நாதன், எந்திரன் படத்தின் போது எடுத்த போட்டோஷூட் பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இந்த புகைப்படங்கள் நான் 2008-ல் எந்திரன் போட்டோஷூட்டில் எடுத்தவை. இதை பலர் க்ராபிக்ஸ் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் இது உண்மையாகவே எடுக்கப்பட்டது. இந்த போட்டோஷூட்டுக்காக ரஜினி சார் ரொம்பவே மெனக்கெட்டார் என பதிவிட்டுள்ளார். இவரது பதிவு இணையத்தை அசத்தி வருகிறது. 

ரிச்சர்ட் எம் நாதனின் பதிவின் கீழ் பதிலளித்த பேட்ட பட கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜன், நானும் அந்த இடத்தில் இருந்தேன். இந்த ப்ராஜெக்ட்டில் பணிபுரிந்தது சந்தோஷமாக இருந்தது. நான் தான் இந்த ஹெல்மெட், கண்ணாடி, ரோஸ் மற்றும் கிளௌஸ்களை வாங்கி வந்தேன். சாபு சிரில் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என நினைவு கூர்ந்துள்ளார். 

கடந்த 2010-ம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான திரைப்படம் எந்திரன். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சையின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவான இந்த படம் ப்ளாக்பஸ்டரானது. இப்படத்தின் மேக்கிங் பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தின் CG எனப்படும் க்ராபிக்ஸ் காட்சிகளை திரை விரும்பிகள் பாராட்டினர். சிட்டி தி ரோபோட்டாக அசத்தியிருப்பார் சூப்பர்ஸ்டார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் STR நடிக்கவிருக்கும் மாநாடு. ராதாமோகன் இயக்கத்தில் SJ சூர்யா நடித்த பொம்மை போன்ற படங்கள் ரிச்சர்ட் எம் நாதன் கைவசம் உள்ளது.