தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வியாபாரரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் கர்ணன். தனுஷை கர்ணனாக செதுக்கியிருந்தார் மாரி செல்வராஜ். கொடியன்குளம் பக்கத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கர்ணன் திரைப்படம் உருவாக்கப்பட்டது.

ஏப்ரல் 9-ந் தேதி வெளியான இத்திரைப்படம் தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. மேலும், தனுஷ் படத்துக்கு இதுவரை இல்லாத வசூல் முதல் நாளிலேயே கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் சாதிப் பிரச்சினைகளை தூண்டும் வகையில் கர்ணன் திரைப்படம் அமைந்திருப்பதாக சில கருத்துக்கள் வெளியானது. இருந்தாலும் அதையெல்லாம் மீறி படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது.

கர்ணன் திரைப்படம் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அமேசான் தளத்தில் கர்ணன் திரைப்படம் நல்ல தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. 

கர்ணன் திரைப்படம் வெளியான முதல்நாள் மட்டும்தான் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி இருந்தது நிலையில், அடுத்த நாள் வெறும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே வைத்துக்கொண்டு தனுஷ் படம் இவ்வளவு பெரிய வசூலை வாரி குவித்திருப்பது நாளுக்கு நாள் அவரது சினிமா மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறது.

இந்நிலையில் படத்தின் தட்டான் தட்டான் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தனுஷ் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். ரொமான்டிக் டச் கொண்ட இந்த பாடல் அதிக பார்வையாளர்களை பெற்று யூட்யூப் தளத்தில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.